Tuesday, October 8, 2013


பெருநாள் தினத்தை மறுமையோடு ஒப்பிட முடியும். மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை அல்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகிறது. 

“அந்நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும் மகிழ்வுடையதாகவும் இருக்கும். ஆனால், அந்நாளில் வேறு சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.”
(ஸூரா அபஸ: 3841)

பெருநாள் தினங்களிலும் சில முகங்கள் இப்படித்தான் இருக்கும். துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் நோன்பு நோற்று, நற்கருமங்கள் செய்து, இபாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹஜ்ஜுப் பெருநாள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நற்கருமங்கள் செய்தவர்கள் இந்நாளில் மலர்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் இன்முகங்களில் புன்னகை பூத்திருக்கும்.

மறுபக்கம்,
  • இந்த வருடத்தைப் பாழ்படுத்தியவர்கள்
  • அல்லாஹ்வை மறந்து பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள்...
  • இந்த துல்ஹிஜ்ஜா  மாதத்தை வீணாகக் கழித்தவர்கள்...
  • ஹஜ் கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவர்கள்
இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இருள் சூழ்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ மலர்ச்சியோ தென்படாது. 

எனவே, பெருநாள் தினம் மறுமை நாளுக்கு ஒப்பான ஒரு நாள் என்றால் அதில் மிகையில்லை.

பெருநாள் தினம் ஆடிப் பாடி, கும்மாளமிட்டு வீண் விளையாட்டுகளில் கழிப்பதற்கான ஒரு நாளல்ல. பெருநாள் தினம் திக்ரோடு ஆரம்பிக்கிறது. தொழுகையோடு தொடர்கிறது. திக்ரோடு நிறைவு பெறுகிறது. நல்லமல்கள் புரியக்கூடிய ஒரு நன்னாள் அது.

ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்த முறைப் பிரகாரம் கொண்டாட வேண்டும்.

பெருநாள் தினத்தில், விசேடமாக பெருநாளுக்காக குளிப்பது ஒரு முக்கியமான ஸுன்னா. நறுமணம் பூசிக் கொள்வதும் இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்திலே நாம் கடை பிடிக்க வேண்டிய ஸுன்னாக்கள். ஆடை, அணிகலன்கள் புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது. 



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹஸன்  (ரழியல்லாஹு அன்ஹு)  அவர்கள், “பெருநாள் தினத்திலே எம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள்  மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும் எம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக் கொள்ள வேண்டும் எம்மிடமுள்ள கால்நடைகளுள் மிகவும் பெறுமதியான கால்நடையை உழ்ஹிய்யாவாக அறுத்துப் பலியிடவேண்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கின்றார்கள்” எனச்  சொல்கிறார்கள்.  (அல்ஹாகிம்)


இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு பெருநாட்களின்போதும் தன்னிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார்கள். அவர்களிடம் ஒரு விஷேடமான ஆடை இருந்தது. குறிப்பாக, அந்த ஆடையை ஈதுல் பித்ர் தினத்திலும் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அவர்கள் அணிவார்கள்.”


ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைப் பொறுத்தவரை, பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்வது நபிவழியாகும். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைப் பொறுத்தவரை நேரகாலத்தோடு பள்ளிவாசலுக்குச் சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பியதன் பின்னரே காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதுதான் ஸுன்னா. இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள்” என புரைதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அத்திர்மதி, அஹ்மத், இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்) 


இரு பெருநாள் தொழுகைகளை பொதுவான ஒரு மைதானத்தில் அல்லது ஒரு திறந்த வெளியில் (முஸல்லா) அமைத்துக் கொள்வது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய முக்கியமான ஒரு  ஸுன்னாவாகும். 

மழை போன்ற நியாயமான ஒரு காரணத்துக்காக மாத்திரம் பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் நடத்தலாம். இப்படி நியாயமான காரணங்கள் இல்லாத நிலையிலும் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் மழை காரணமாக ஒரே ஒரு பெருநாள் தொழுகைகயைத்தான் பள்ளிவாசலில் நிறை வேற்றியிருக்கிறார்கள். ஏனைய பெருநாள் தொழுகைகளையெல்லாம் அவர்கள் ஒரு பொதுவான மைதானத்தில் அல்லது திறந்த வெளியில்தான் நடத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

திறந்த இடத்திலே பெருநாள் தொழுகையை அமைத்துக் கொள்வதோடு ஆண்கள் மாத்திரமன்றி, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அனைவரும் அந்த மைதானத்துக்குச் செல்வதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறையைச் சார்ந்ததாகும். 


உம்மு அதிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். 

“வீட்டில் தனித்திருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் உட்பட இரு பெருநாள் தொழுகைக்கு வெளியேவர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால், மாதவிடாய் பெண்கள் மாத்திரம் தொழுமிடத்திலிருந்து ஒரு பக்கமாக ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம்...”       (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்) 

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய மனைவிமார் உட்பட தனது பெண் பிள்ளைகள் எல்லோரையும் பெருநாள் தொழுகைக்காக மைதானத்துக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் குறிப்பிடத்தக்கது. 



பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான ஸுன்னா இருக்கிறது. அதுதான் ஒரு பாதையால் தொழுகைக்குச் சென்று மற்றறொரு பதையால் வீடு திரும்புதலாகும். 

ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றறொரு வழியால் திரும்புவார்கள்.” (ஸஹீஹு முஸ்லிம், அஹ்மத், அத்திர்மிதி) 

தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கு ஒரு பாதை மாத்திரமே இருக்கின்றது அல்லது வேறு பாதையினால் திரும்புவதில் ஏதும் சிரமங்கள் இருக்கின்றன என அறிந்தால் சென்ற பாதையினூடாகவே திரும்பி வருவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆயுளில் மிகவும் அரிதாகக்கிடைக்கக்கூடிய இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இப்படியான ஸுன்னத்துக்களை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

பெருநாள் தொழுகையுடன் தொடர்புடைய மிக முக்கியமான மற்றுமொரு ஸுன்னா பெருநாள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவது. ஆனால், இன்று பெருநாள் தொழுகை முடியுமானவரை தாமதப்படுத்தப்படுகிறது. இது நபியவர்களின் ஸுன்னாவுக்கு மாற்றமானது. குறிப்பாக, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தொழுகையை முடியுமான வரை நேரகாலத்தோடு தொழுவது மிக முக்கியமான ஒரு ஸுன்னா. 

ஜுன்துப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “இரண்டு ஈட்டியின் அளவு உயரத்திற்கு சூரியன் உயரும்போது ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையையும் சூரியன் ஓர் ஈட்டியின் அளவுக்கு உயரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  நிறைவேற்றுவார்கள்.” 

“ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றுவது ஸுன்னத்தாகும்” என இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள். 

பெருநாள் தொழுகை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய, வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா). பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் சிலர் பெருநாள் குத்பா பிரசங்கத்தைக் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெருநாள் தொழுகை ஒரு ஸுன்னா முஅக்கதாவாக இருப்பது போலவே பெருநாள் குத்பாவைக் கேட்பதும் ஒரு ஸுன்னா முஅக்கதா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் இயல்பை, சுபாவத்தை அறிந்து வைத்துள்ள இஸ்லாம், பெருநாள் தினத்தில் மகிழ்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹலாலான ஆகுமான விளை யாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. 

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள்.

“பெருநாள் தினத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்திருக்க அபீசீனியா அடிமைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். நான் அந்தக் காட்சியை நபியவர்களின் புஜத்துக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அந்தக் காட்சியைக் கண்டுகளிக்க வேண்டுமென்பதற்காக நபியவர்கள் குனிந்து தனது முதுகைப் பணித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்த அபீசீனியா அடிமைகளுடைய ஆடல், பாடல்களைக் கேட்டு ரசித்தேன். மனநிறைவு அடைந்ததைத் தொடர்ந்து நான் வீட்டுக்குள்ளே சென்று விட்டேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்)

இந்த வகையில் எமது குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்தப் பெருநாள் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் ஆகுமான, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை, கலை நிகழ்ச்சிகளை ஷரீஆ வரம்புகளைப் பேணி ஒழுங்கு செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. இது மனிதனின் அழகியல் தேவை. இது நிறைவேற்றப்படாதபோது அவர்கள் வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகளின்பால் திசை திரும்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பெருநாள் தினத்தல் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து திக்ர் சொல்ல வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்று. ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை பெருநாள் தினம் தொடக்கம் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் முடியும் வரை திக்ர் சொல்வது ஸுன்னா. அந்த வகையில் திக்ரை அதிகமதிகம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே அல்லாஹ் இதன் மூலம் நாடுகின்றான்” என அல்லாஹுத் தஆலா அவனைப் போற்றிப் புகழுமாறு கூறுகின்றான்.

“ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்ந்தும் திக்ர் கூறியும் அழகுபடுத்துங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு ஸுன்னா இருக்கின்றது. அதுதான் வாழ்த்துத் தெரிவிப்பது. பெருநாள் தினத்தில் நபித் தோழர்கள் சந்தித்துக் கொண்டால் “தகப் பலல்லாஹு மின்னா வமின்கும்” (அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்திக் கொள்வானாக) என்று வாழ்த்துக்கூறியவர்களாக முஸாபஹா, முஆனகா செய்துகொள்வார்கள். இது வெறுமனே ஒரு வாழ்த்து மட்டுமல்ல, ஓர் உயர்ந்த பிரார்த்தனையும்கூட.

ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா) என்ற வகையில் இந்தக் கடமையையும் நாம் நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யா கொடுப்பதினூடாக இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒன்று, இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய தியாகத்தை, அர்ப்பணத்தை நினைவுகூர்தல். மற்றையது பெருநாள் தினத்தில் ஏழைகள், தேவையுடையவர்களுக்கு மாமிசத்தைக் கொடுத்து  அவர்களுடைய தேவையை நிறைவேற்றுதல். 

பல்லின சமூகத்தவர்கள் வாழும் ஒரு நாட்டில், பிற சமயத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பது எமது கடமை. இது இஸ்லாம் எம்மிடம் வேண்டிநிற்கும் ஓர் அடிப்படைப் பண்பு. எமது நாட்டில் பெரும்பான்மையினராக வாழ்கின்றவர்கள் பசு வதையை விரும்பாதவர்கள் அதனை வெறுப்பவர்கள். அவர்கள் பசு மாட்டை புனிதமாக மதிக்கின்ற நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, நாம் மாடு அறுத்து குர்பான் கொடுக்கின்றபோது அவர்களுடைய மத உணர்வுகள் புண்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

பெருநாள் தினத்தில் எமது சகோதர சகோதரிகள், இனபந்துக்கள், அன்பர்களை, நண்பர்கள், உற்றார் உறவினரை அரவணைப்பது, ஆதரிப்பது, அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது அவர்களுடனான உறவைப் பலப்படுத்திக்கொள்வது, பகைமை இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக்கொள்வது... போன்ற உன்னத கூலிகளைப் பெற்றுத்தரக் கூடிய அம்சங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, எமது பெற்றறோர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் உதவும். “குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம் நுழைய மாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் பலவீனமானவர்கள் என்பதனால் நாம் எமது வீட்டில், காரியாலயத்தில், ஊரில் சக மனிதர்களோடு உறவாடுகின்றபோது பகைமை ஏற்பட்டிருக்கும், சிலரரோடு திருப்தியடைந்திருப்போம் மற்றும் சிலரோடு கோபித்துக் கொண்டிருப்போம். 

இவற்றையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான பாரியதொரு சந்தர்ப்பமாக இத்தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் உலகில் இரண்டு விடயங்களை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறான்.
  1. நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என விரும்புவது.
  2. தன்னுடைய வாழ்வாதாரத்தில் பரகத் கிடைக்க வேண்டும் என்பது.

இவ்விரு தேவைகளையும் இரத்த உறவுகளைப் பேணி நடப்பதன் மூலம் அல்லாஹ் அருளுவதாக நபியவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “யார் தனது வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும் ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறாரோ அவர் தனது இனபந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.” 

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “தனது இரட்சகனை அஞ்சி இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும் செல்வம் பெருகும் அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பர்.” (அலஅதபுல் முப்ரத்)

இரத்த உறவைப் பேணி வாழ்ந்தால், தன் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைப் பேணி வாழ்ந்தால் சுகமாக வாழலாம் நீண்ட ஆயுளைப் பெறலாம். இனபந்துக்களுடனான உறவைத் துண்டித்து, குறைத்துக் கொண்டு அவர்களை அனுசரிக்காமல், அரவணைக்காமல் சுயநலமிகளாக வாழ்கின்ற மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று ஆரோக்கியமாக வாழ முடியாது அவர்களது நாளாந்த செலவினம் குறைவடையாது. அதற்கு மாற்றமான விளைவையே அவர்கள் அனுபவிப்பார்கள். இதனை நாம் இன்று நடைமுறையில் காண்கின்றோம்.

மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை வழிகாட்டல்களும் இஸ்லாத்தில் உண்டு. மனிதன் உலகில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான, ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வதற்கான அற்புதமான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. 

அத்தகைய வழிகாட்டலில் ஒன்றுதான், எமது உற்றார் உறவினர்களை, இரத்த உறவினர்கள் நாம் எந்தளவு தூரம் சேர்ந்து நடக்கின்றோமோ அந்தளவுக்கு அல்லாஹுத் தஆலா எமது வாழ்வாதாரத்திலும் ஆயுளிலும் விஸ்தீரணத்தை ஏற்படுத்துவதாகும்.

பெருநாள் தினத்தில் அண்டை அயலவர்களுக்கு நாம் அதிகம் உபகாரம் செய்ய வேண்டும். அவர்கள் முஸ்லிம்களாகவோ முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களை அனுசரிக்கின்ற, அரவணைக்கின்ற ஒரு நாளாக பெருநாள் தினத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களைச் சந்தித்தல், வாழ்த்துத் தெரிவித்தல், அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல் போன்ற அவர்களை மகிழ்வூட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இந்தப் பெருநாள் தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கூடாக சாந்தியும் சமாதானமும் ஐக்கியமும் நிலவக்கூடிய ஒரு கிராமத்தை, ஒரு நகரத்தை, ஒரு நாட்டை, ஓர் உலகத்தைக் கட்டியெழுப்பவே இந்த மார்க்கம் விரும்புகிறது. இந்த மார்க்கத்தின் பிரதான நோக்கமே சாந்தி, சமாதானம், அமைதியை இந்த உலகில் நிலைநிறுத்துவதுதான். இந்த மார்க்கம் ஒவ்வோர் அமலுக்கூடாகவும் மனிதர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை, ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறது. பெருநாள் தினம் இந்த ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பிரகடனப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம்.

குறிப்பாக, இந்தப் பெருநாள் தினத்தைத் தொடர்ந்து நாம் அந்நிய மக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்துவதற்கூடாக இந்த மார்க்கத்தின் செய்தியை எத்திவைக்க முடியும்.

எனவே, பெருநாள் தினம் என்பது எமது குடும்பத்தினரிடையே, சகோதர சகோதரிகளுக்கு மத்தியில், அண்டை அயலவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய நாள். எம்மைச் சூழ வாழ்கின்ற அனைவர் மத்தியிலும் சாந்தி சமாதானத்தை உருவாக்க வேண்டிய நாள். இந்த மகத்தான தியாகத் திருநாளின் ஸுன்னத்துக்களை, இஸ்லாமிய தத்துவங்களை, தாத்பரியங்களை, அடிப்படையான போதனைகளை நாம் கடைபிடிப்பதற்கு அல்லாஹுத் தஆலா எம் னைவருக்கும் அருள் புரிவானாக!


அஷ்ஷெய்க் A. C. அகார் முஹம்மத் (நளீமி)

பிரதிப்பணிப்பாளர் - ஜாமியா நளீமிய்யா


0 comments:

Post a Comment