Monday, August 26, 2013எமது கட்டளையைக் கொண்டு நேர்வழியின்பால் (சமூகத்தை) வழிநடத்துகின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மேலும் நல்லவைகளைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்தை வழங்கிடுமாறும் அவர்களுக்கு நாம் அறிவித்தோம். அவர்கள் எங்களுக்கு அடிபணிகின்றவர்களாக இருந்தனர் (அன்பியா : 21)"

மேலும், நரகத்தின்பால் அழைக்கின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் யாராலும் உதவிசெய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சாபத்தை விதியாக்கினோம். மேலும் மறுமையில் அவர்கள் இழிவடைந்தோராக இருப்பார்கள்". (ஸூறதுல் கஸஸ் : 41)

அல்குர்ஆன் மனித சமூகத்திற்குத் தேவையான அனைத்து வாழ்வியல் நெறிகளையும், போதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. இப்போதனைகளும், நெறிகளும் எல்லா காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் பொதுவானவைகளாகவும், பொருத்தமானவைகளாகவும் அமைந்துள்ளன. இவற்றை மனித சமூகம் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துவதிலேயே அதன் உண்மையான வெற்றியும், சந்தோசமும் தங்கியிருக்கின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக இன்றைய உலகு அல்குர்ஆனின் வழிகாட்டலை விட்டும் திசைத்திருப்பப்பட்டிருக்கிறது. அசிங்கங்களும், அருவருப்புக்களும் மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்குரியவைகளாக புனையப்பட்டிருக்கின்றன. மனித சமூகத்தை நிலையான வெற்றியின்பாலும், உண்மையான சுபீட்சத்தின்பாலும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு சமூகத்தின் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பவர்களையே சாரும். ஏனெனில் இத்தலைமைத்துவமே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் (ஆட்சியாளர்கள்) இரு வகையில் சமூகத்தை வழிநடத்த முற்படுவர் என அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.

முதல் வகையினர் : நேர்வழியின்பால் வழிநடத்துவோர்.

இரண்டாம் வகையினர் : நரகத்தின்பால் வழிநடத்துவோர்.முதல் வகையினரைப் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"எமது கட்டளையைக் கொண்டு நேர்வழியின்பால் (சமூகத்தை) வழிநடத்துகின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மேலும் நல்லவைகளைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்தை வழங்கிடுமாறும் அவர்களுக்கு நாம் அறிவித்தோம். அவர்கள் எங்களுக்கு அடிபணிகின்றவர்களாக இருந்தனர்" (அன்பியா :21)

அரசியல் அதிகாரமென்பது தன் சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கல்ல, மாறாக - அல்லாஹூத்தஆலாவின் விருப்புக்களை நிறைவேற்றி, அவன் வெறுக்கின்றவைகளை பூமியிலிருந்து துடைத்தெறிவதற்கே என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது. இப்பணியைச் செய்வதனாலேயே ஆட்சியாளன் பிரதிநிதி எனும் பொருட்பட 'கலீபா' என்று இஸ்லாமிய பரிபாசையில் அழைக்கப்படுகின்றான். 


இரண்டாம் வகை ஆட்சியாளர்கள் பற்றிய அல்குர்ஆனின் கூற்று பின்வருமாறு அமைந்திருக்கிறது.

"மேலும், நரகத்தின்பால் அழைக்கின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் யாராலும் உதவிசெய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சாபத்தை விதியாக்கினோம். மேலும் மறுமையில் அவர்கள் இழிவடைந்தோராக இருப்பார்கள்" (ஸூறதுல் கஸஸ் : 41)


இவ்வசனம் மூஸா (அலை) அவர்களின் காலத்தில் அதிகாரபீடத்திலிருந்த பிர்அவ்னையும் அவனது அமைச்சன் ஹாமானையும் குறித்துப் பேசுகின்றது. தற்பெருமை, சத்தியத்தை ஏற்க மறுத்தமை, தனக்கு கீழிருந்த 'கிப்தி' இனத்தவர்களுக்கு அநீதியிழைத்தமை போன்ற காரணிகளால் பிர்அவ்னின் ஆட்சி, அதிகாரம் நைல் நதிக்குள் மூழ்குண்டு அழிய வேண்டியதாயிற்று. ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்ற இத்தகைய பண்புகள் அவர்கள் உலகில் வீழ்ச்சியடைவதற்கும், மறுமையில் தோல்வியடைவதற்கும் வழிகோலும் என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது. சமூகத்தை வழிநடத்துகின்ற ஆட்சியாளர்கள் உயரிய பண்புகளையும், குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிட்டு அல்லாஹூத்தஆலா பின்வருமாறு பணிக்கின்றான்.

"தாவூதே உம்மை பூமியின் ஆட்சியாளராக (கலீபாவாக) நாம் ஆக்கினோம். எனவே சத்தியத்தைக் கொண்டு மக்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. மனோ இச்சைக்கு ஒருபோதும் கட்டுப்பட்டுவிடாதீர். அது அல்லாஹ்வின் (நேரிய) பாதையிலிருந்தும் உம்மை திசைத்திருப்பி வழிகெடுத்துவிடும்" ( சூறதுல் பகரா : 247) 


மேலும் மதீனாவில் இறை தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அல்லாஹூத்தஆலா, சமூகத் தலைவர் என்ற வகையில் மக்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வறுமாறு கூறுகின்றான்.

"அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களோடு இரக்கத்தோடு நடந்து கொண்டீர். நீர் மோசமான பண்புள்ளவராகவும், கல்நெஞ்சக்காரராகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் தூரவிலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் முன் செய்த தவறுகளை மன்னித்து அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவீராக!.மேலும் (நடைமுறை) விவகாரங்கள் தொடர்பாக அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வீராக".(ஆல இம்ரான் -159).


மக்களுக்கும் - ஆட்சியாளனுக்கும் இடையிலான உறவு சீராக இருப்பதிலேயே நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது. ஆட்சியாளர்களின் பண்புகள், குணாம்சங்களைப் பொறுத்தே குடி மக்களின் பண்பு நலன்களும் அமையும். இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இமாம் மாவர்தி (ஹி 450) அவர்கள் இது பற்றிய அழகான உதாரணமொன்றைக் குறிப்பிடுகின்றார்.

ஆட்சியாளர்கள் என்போர் தரையில் நட்டப்பட்ட ஒரு தடியைப் போன்றவர்கள். அத்தடியின் நிழலே நாட்டின் குடிமக்கள். தடி கோணலாக இருக்கின்ற போது அதன் நிழலும் கோணலாகவே அமையும். தடியின் கோணலை சீராக்கினாலேயன்றி ஒரு போதும் நிழலின் கோணலை சீர்படுத்திட முடியாது” (நூல் : நஸீஹதுல் முலூக்).


இன்றைய உலகின் அனைத்து விவகாரங்களும் சடவாத சிந்தனையின் அடியாகவே தீர்மானிக்கப்படுகின்றன. அரசியல் விவகாரமும் அப்படித்தான். பண பலமும், செல்வாக்குமே ஆட்சியாளனைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கணிக்கப்படுகின்றன. பண்புகளுக்கும், நடத்தைகளுக்கும் எத்தகைய பெருமானங்களும் வழங்கப்படுவதில்லை. ஆனால் இச்சிந்தனை பிழையானது என்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. தாலூத் (அலை) அவர்களை பனூ இஸ்ரவேலர்களின் ஆட்சியாளராக அல்லாஹூத்தஆலா தெரிவு செய்த போது அச் சமூகம் அவரைப் பார்த்து இவரிடம் பணமோ அந்தஸ்த்தோ இல்லையே, இவர் எப்படி எங்களை வழிநடத்தப் போகிறார் என வினவியது. இச்சம்பவம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"உங்களுக்கு தாலூதை ஆட்சியாளராக அல்லாஹ் அனுப்பியிருக்கின்றான் என்று அவர்களின் நபி அவர்களுக்குக் கூறிய போது, 'அவர் எப்படி எமக்கு ஆட்சி செலுத்த முடியும்? அவரிடம் பெரும் சொத்துக்களோ, செல்வாக்கோ இல்லையே? அவரை விட நாமே ஆட்சிக்கு உரித்துடையவர்கள்' என்று அவர்கள் கூறினர். அதற்கு அந்நபி கூறினார்: 'அல்லாஹ்தான் அவரை உங்களுக்குத் தெரிவு செய்து அனுப்பியுள்ளான். அவருக்கு அறிவு ஞானத்தையும், வீரத்தையும் அதிகமாக அல்லாஹ் கொடுத்திருக்கின்றான்" (பகரா :251)


மேலுள்ள வசனம் ஆட்சியாளரை தெரிவு செய்வதில் பண பலமோ, அதிகாரச் செல்வாக்கோ தாக்கம் செலுத்தக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இன்றைய அரசியல் ஒழுங்கில் பணமும், அதிகார பலமுமே ஆட்சியாளனைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கின்றன. கொலை காரர்களும், கொள்ளையர்களும் அதிகாரபீடத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அவலநிலையை நாம் எல்லா தேசங்களிலும் காண்கின்றோம். இவர்களின் தலைமைத்துவம் சமூகத்தை நேர்வழியின்பாலும், சுபீட்சத்தின்பாலும் இட்டுச் செல்லுமா? அல்லது அழிவின்பாலும், நரகத்தின்பாலும் இட்டுச் செல்லுமா?

நவீன கால அரசியல் தத்துவங்கள் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வரையறுப்பதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தில் ஒரு சிறு அளவையேனும் அவர்களின் நடத்தைகளும், பண்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற அம்சத்திற்கு வழங்காதிருப்பதை நாம் காண்கின்றோம். இதன் விளைவாக அதிகாரத் துஷ்பிரயோகங்களும், ஊழல் - மோசடிகளும் பெருகி நாடுகளும், சமூகங்களும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை நடைமுறையில் காண்கின்றோம்.ஆனால், இஸ்லாமிய அரசியல் சிந்தனையில் ஆட்சியாளர்களின் பண்புகள், நடத்தைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இது குறித்த தனியான நூற்களை ஆரம்ப கால இமாம்கள் எழுதியுள்ளனர்.

  • அதபுத் துன்யா வத் தீன்
  • நஸீஹதுல் முலூக்
  • அல்-அஹ்காமுஸ் ஸூல்தானிய்யா (இமாம் மாவர்தி)
  • இஸ்லாஹூர் ராஇ வர் ரஇய்யா (இமாம் இப்னு தைமிய்யா)
  • அத்துருகுல் ஹூகுமிய்யா (இமாம் இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸி)

ஆகியன அவற்றுள் சிலவாகும்.ஒரு தேசத்தை சிறப்பான தேசமாக (அல்-மதீனா fபாழிலா) மாற்றுவதும் அல்லது சீரழிந்த தேசமாக (அல்-மதீனா fபாஸிதா) மாற்றுவதும் ஆட்சியாளாகளின் பண்பு நடத்தைகளிலேயே தங்கியுள்ளன. முஸ்லிம் சமூகம் ஓர் இலட்சிய சமூகம். மறுமையில் சுவனத்தை பெற்றுக் கொள்வதும், உலகில் நீதியை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்துவதுமே அதன் இலட்சிய வேட்கை. இவ்விலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கின்ற தலைமைத்துவமே முஸ்லிம் சமூகத்திற்குத் தலைமையாக அமைய வேண்டும். பண்பு நலனற்ற, ஜாஹிலிய்யத்தின் அத்தனை பண்புகளையும் அணிகலனாய்க் கொண்டிருக்கின்ற தலைமைத்துவங்களில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் திருப்தியுறாது. அல்லாஹூத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு வினவுகின்றான்.

"அவர்கள் ஜாஹிலிய்ய ஆட்சியையா விரும்புகின்றனர்? அல்லாஹ்வை விசுவாசிக்கின்றவர்களுக்கு அவனை விட சிறந்த ஆட்சியாளன் யாரிருக்க முடியும்?" (அல்-மாஇதா : 50)


ஆம் அல்லாஹ்வை விட சிறந்த ஆட்சியாளன் யாருமில்லை. அவனது ஷரீஅத்தின் பிரகாரம் ஆளப்படுகின்ற ஆட்சியைத் தவிர சிறந்த ஆட்சி முறை இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை.


~ அஷ்ஷெய்க் S. H. இஸ்மத் அலி (நளீமி) M.A. ~

0 comments:

Post a Comment