Wednesday, August 21, 2013


ஒருவர் நீண்ட காலமாக வாகனம் ஒன்று வாங்குவதற்கு ஆசை வைத்திருந்தார். பல வருட முயற்சிக்குப் பின்னர் தனது செலவுகளை முடியுமானவரை சுறுக்கிச் சேமித்த பணத்திலிருந்து ஒரு மோட்டார் வண்டியை வாங்கினார். தற்போது தான் ஒரு மோட்டார் வண்டியின் உரிமையாளர் என்ற எண்ணம் அவரை சந்தோசப்படுத்தியது. பலரிடம் வீட்டில் இருக்கும் வாகனத்தை வந்து பார்க்குமாறு கூறி அவர்கள் கூற்றில் அகமகிழ்ந்தார். தனது வாகனத்தை மேலும் அழகுபடுத்த எண்ணி அதற்கு மேலதிக உபகரணங்களையும் பொருத்தி அழகு பார்த்தார். அதிசயம் என்ன தெரியுமா! இவர் இந்த வாகனத்தில் ஏறிப் பயணிப்பதில்லை, மாறாக அதன் அழகை இரசிப்பதும், அது தன்னுடையது என்றும் இறுமாப்பு கொள்வதிலும் காலத்தைக் கழித்து தனது பயணங்களை நடையினூடகவே நிறைவேற்றிக் கொள்கிறார். இத்தகைய ஒரு மனிதனது உதாரணம் அவனை பற்றிய ஒரு கணிப்பீட்டை எம் மனக்கண் முன் கொண்டுவந்து சேர்க்கும். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? பொருளின் நோக்கம் அறியாதவன். அதனை ஏன் உற்பத்தி செய்துள்ளார்கள் என்பதை விளங்காதவன். இத்தகைய பொருளின் நோக்கம் அறியாத ஜீவராசிகள் இந்த உலகத்தில் இருக்கமாட்டார்கள் என நீங்கள் வாதிடலாம். ஆனால், தான் பயன்படுத்தும் பொருட்களின் நோக்கத்தை அறிந்து வைத்திருக்கின்ற மனிதன் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து வாழ்கின்றான் அல்லது அறியாது வாழ்கின்றான். பயன்படுத்தும் பொருளின் நோக்கம் அறியாதவன் மடையனா? தான் படைக்கப்பட்டிருக்கும் நோக்கத்தை அறியாதவன் மடையனா? பொருளின் நோக்கம் அறியாதவன் அதிகம் நட்டம் அடைவானா? தான் ஏன் என்று அறியாதவன் அதிகம் நஷ்டப்படுவானா? 

உலகில் தோன்றி மறைகின்ற அதிக மனித, ஜின் ஜீவராசிகள் தனது நோக்கத்தை விளங்காததால் அல்லது மறந்ததனால் நரகம் செல்கின்றன.

நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் பலரை நரகத்திற்கென்றே நாம் படைத்திருக்கிறோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன: அவற்றைக்கொண்டு அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆவர்களுக்கு கண்களுமுண்டு: எனினும் அவற்றைக்கொண்டு அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளும் உண்டு: எனினும் அவற்றைக்கொண்டு அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப்போன்றவர்கள் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள் தான் அலட்சியம் செய்தவர்களாவர்(7:179)

இன்னும் அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் செவிசாய்த்து அவைகளை சிந்தித்திருந்தால் நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம் (67:10)


இதனது உலக விளைவு உலகில் மோசடிகளும், அநியாயங்களும் அக்கிரமங்களும் தலைதூக்குகின்றன. அவ்வாறே மறுமையில் நரகத்தை தனக்கென சுவீகரித்துக் கொள்கின்றான். 

அல்லாஹுத் தஆலா எம்மைப் பார்த்து அவனது வசனங்களினூடாக இவ்வாறு கதைக்கின்றான்: 

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன (3:190)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்ற விடயம் பற்றி சற்று ஆழமாக சிந்திக்கின்ற போது ஒரு படிப்பினையை விளங்க முடிகின்றது. இந்த பூமியின் ஒழுங்கமைப்பு மிக கச்சிதமானது. சூரியனிலிருந்து அதன் தூரம் மிக நுணுக்கமாக வரையறுக்கப்படுகன்றது. இதனது மேற்பரப்பு வெப்பநிலை  கட்டுப்படுத்தப்பட்டு உயிரினங்களின் வாழ்வுக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது.



எனவே, பல கோடான கோடி கோல்களுள் இதுவரை நாம் அறிந்த வகையில் இப்புவியில் மாத்திரமே உயிரினங்கள் வாழ்கின்றன என விஞ்ஞானம் கூறுகின்றது. இது அல்லாஹுத் தஆலாவின் கச்சிதமான ஏற்பாடாகும். என்றாலும், இந்த பூமிக்கு அல்லாஹுத் தஆலா இரண்டு தொடர்ந்தேர்ச்சியான பொறுப்புக்களை கொடுத்துள்ளான். அவற்றை பூமி கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது. 
  1. தன்னைத் தானே சுழல்வது
  2. சூரியனை குறிப்பிட்ட ஒரு கோட்டில் வழம் வருவது.

பூமி, தன்னைத் தானே சுழல்தல் என்ற வேலையை செய்ய மறந்தால் உலகில் இரவு பகல் மாறி மாறி வராது. சூரியனை குறிப்பிட்ட தவணையில் சுற்றி வராவிட்டால் காலநிலை மாற்றங்கள் ஏற்படாது. இது நாமறிந்த விடயம். புவியின் அமைப்பு உயிரினம் வாழ்வதற்கு பொருத்தமானது, என்றாலும் பூமி தனது இரு பணிகளையுமோ அல்லது பணிகளில் ஒன்றையோ செய்ய தவறுகின்ற போது அது வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்காது. மழை, வெயில், இலை தளிர், இலை உதிர், மாரி, கோடை என்ற காலநிலை மாற்றங்கள் அற்ற ஒரே விதமான காலநிலையைக் கொண்ட பூமியாக அல்லது ஒரு பகுதியில் தொடர்ந்து இரவையும் இன்னுமொரு பகுதியில் தொடர்ந்து பகலையும் கொண்டதாக மாறும். இத்தகைய சீரற்ற தன்மை உயிரினங்களின் ஒழுங்கான வாழ்வு வட்டத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, அல்லாஹுத் தஆலா பூமியை சரியான இடத்தில் வைத்திருந்தாலும் கூட புவி தனது வேலையை செய்யாத போது அது வாழ்வதற்கு பொருத்தமற்ற இடமாக மாறுகின்றது. இதேபோன்று அல்லாஹுத் தஆலா மனிதனை படைப்புக்களுள் சிறந்த படைப்பாக படைத்திருக்கின்றான். அவனுக்கு நிறைய ஆற்றல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், அவன் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை மறக்கின்ற போது அவன் மிருகங்களை விட கீழ்த்தரமானவனாக மாறுகின்றான், உருவத்தில் அவன் மனிதன் போன்று தென்பட்டாலும் சரியே.

பூமிக்கு இரண்டு பொறுப்புக்கள் போல் மனிதனுக்கு இரண்டு பொறுப்புக்கள் உள்ளன. 

  1. தனது உள்ளத்தில் இஸ்லாத்தை பதித்து அதனூடாக உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி அல்லாஹுத் தஆலாவை வழிப்படுவதில் தனது உடலை பழக்கி சாந்தியையும், இறை திருப்தயையும் பெற்றுக் கொள்ளல்.
  2. தான் வாழும் குடும்பத்திலும் சமூகத்திலும் இறை வழிகாட்டலுக்கு எதிரான அனைத்து விதமான பாவங்கள், அனாச்சாரங்களை அகற்றி நன்மைகளை வாழவைத்து இறை வழிகாட்டலால் அமைதியும், நீதியும் பெறுகின்ற ஒரு சமூகமாக மாற்றியமைத்தல்.

இதனை விளங்காது வாழும் மனிதனும், விளங்கிய பின்பு மறந்து வாழ்வபவனும் ஒருவகையில் சமமே. ஏனெனில் இருவரும் செயற்படவில்லை.

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான். (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். (அதற்கு இறைவன்) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். (20:124 - 126)

பாவங்களால் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கறைகளையும் பயத்தையும் முழுமையாக அகற்றி, உடம்பைச் சூழ்ந்துள்ள சோம்பேரித்தனத்தையும், கோழைத்தனத்தையும் தகர்த்தெரிந்து அல்லாஹுத் தஆலா எம்மீது சுமத்தியுள்ள இரண்டு பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்றுவதற்குத் தயாராகுவோம். இதற்கு எப்போதும் தடையாக இருக்கின்ற ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து அல்லாஹுத் தஆலாவிடம் பாதுகாப்புத் தேடுவோம். இப்பணிக்கு எம்மைத் தயார்படுத்திக் கொள்வோம். மறந்து வாழ்கின்ற ஏனைய இளைஞர்களையும் இதன்பால் அழைத்துவருவோம். தியாகத்தையும் அர்ப்பணத்தையும் எமது அணிகலன்களாக்கிக் கொள்வோம். வெயில், மழை, குளிர், சூடு என ஓய்வு பாராது உழைப்போம். எத்தகைய தடைகளையும் உறுதியாக தாண்டுவதற்கு திடசங்கர்ப்பம் பூணுவோம். ஒற்றுமையை முன்னிறுத்தி அனைவரையும் அரவணைப்பதில் முன்னிற்போம். எதிரிகளின் வார்த்தைகளுக்கு அஞ்சாமலும், மாயக்கரனின் மாய வார்த்தைகளில் வீழ்ந்து விடாமலும் எம்மை உறுதிப்படுத்திக் கொள்வோம். 
பெண்ணுக்குப்பின்னாலும் பொன்னுக்குப் பின்னாலும் சென்று வழிமாறி விழி பிதுங்கி ஒளி இழப்பதிலிருந்து தூரமாகுவோம். ஒன்றே இறைவன் அவனை அடைவதற்கு ஒன்றே வழி, அவ்வழியில் ஓயாது உழைப்போம். இறுதியாக இறுதி மூச்சிவரை இறைபணியில் உழைத்து மடிய உறுதி கொள்வோம். 

வாழ்வோம் அல்லாஹ்வுக்காக, மடிவோம் அவன் தீன் வாழ்வதற்காக. 

~ அபூ றாதியா ~
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment