Sunday, August 25, 2013

மனித வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அறிவியல் வளர்ச்சியை இன்றைய உலகம் கண்டிருக்கின்றது. எனவேதான் அதனை 'அறிவியல் உலகம்' என்று நாம் அழைக்கின்றோம். இத்தகைய அறிவியல் வளர்ச்சியைக் கண்ட உலகம் அறியாமையில் இருக்கின்றது என்று சொன்னால் சிலர் ஆச்சரியப்படலாம். அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கின்ற போது அறியாமைக்கு இடமேது?? என்று தர்க்க ரீதியாக வினாவெழுப்பலாம். என்றாலும் இன்றைய உலகம் பல்வேறு அறியாமைகளுக்குள் மூழ்கிப் போயிருக்கிறது என்ற யதார்த்தத்தை நடுநிலை நின்று சிந்திக்கின்ற எவரும் புரிந்து கொள்வார்கள்.
இன்றைய உலகம் எவ்வகையான அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது?, அதற்கான காரணிகள் என்ன? என்பவைகளை சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.




சிந்தனை, நம்பிக்கையில் அறியாமை

இவ்வகையான அறியாமையினைக் குறிக்க அல்-குர்ஆன் ظن الجاهلية 'ழன்னுல் ஜாஹிலிய்யா' (அறியாமை எண்ணம்) என்ற பதப் பிரயோகத்தை உபயோகிக்கின்றது. படைப்பாளனாகிய அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை படைப்புக்களின் மீது வைப்பதையும், அல்லாஹ்வின் ஆற்றல்களில் சந்தேகப்படுவதையும், அல்லாஹ்வின் மீது நிராசையடைவதையும் குறிக்கவே அல்-குர்ஆன் இச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றது. 

இன்றைய அறிவியல் யுகம் எத்தகைய சிந்தனையின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது? இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற சடவாத சிந்தனையினையே நவீன அறிவியல் உலகம் அடித்தளமாகக் கொண்டிருக்கின்றது.




15ம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியோடு அறிவியல் யுகத்தின் ஆரம்பம் தொடக்கம் பெறுகின்றது. இம் மறுமலர்ச்சியில் அறிவியலாளர்களுக்கும், கிறிஸ்த்தவ திருச்சபைக்குமிடையில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான மோதலின் போது கிறிஸ்த்தவ திருச்சபை மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகளின் விளைவால் அறிவியலாளர்கள் மதத்தை தமது எதிரியாக நோக்கத் தொடங்கினர். அதுவரைக் காலமும் கிறிஸ்த்தவ திருச்சபைக்கு தமது வருமானத்தில் பெரும் தொகையை வரிப் பணமாகச் செலுத்தி வந்த ஆட்சியாளர்கள், திருச்சபையின் கெடுபிடிகளிலிருந்து விடுபட அறிவியலாளர்களின் பக்கம் சார்ந்தனர். இரு தரப்பினரும் இணைந்து மதத்தை அறிவியல், ஆட்சியியல் துறைகளிலிருந்து ஒதுக்கி வைத்தனர். 

இதன் விளைவே சடவாத சிந்தனையின் தோற்றமாக அமைந்தது. மதம், கடவுள், ஒழுக்கம் முதலியவை மனிதனால் புனையப்பட்டவையே தவிர, கடவுளால் மொழியப்பட்டவை அல்ல என்ற தவறான சிந்தனையினை அறிவியல் உலகம் தனது கொள்கையாக ஆக்கிக் கொண்டது. மேலும் அல்லாஹ்வை அறிந்து கொள்வதையும், அவனது இருப்பையும் அறிவுக்கு முரணானதாகவே அது கருதுகின்றது. மனித வாழ்வென்பது பிறப்போடு தொடங்கி, இறப்போடு முடிவடைகின்ற ஒன்று என்பது அதன் நம்பிக்கையாக அமைந்துவிட்டது.

இது எத்தகைய அறியாமை?? இந்த அறியாமையை அறிவியல் உலகம் அறியாமை என்று உணர்ந்திருக்கிறதா? இல்லை என்பதே இதற்கான பதிலாகும்.

உண்மையில் படைப்பாளன் விடயத்தில் மனிதன் அறியாமையில் இருப்பதென்பது அவனது வாழ்வின் நோக்கத்தையே தலை கீழாக மாற்றியமைத்து விடுகின்றது. படைப்பாளன் பற்றிய அறியாமை மறுமை நம்பிக்கையை இல்லாமலாக்கிவிடுகின்றது. இது மனிதனை இவ்வுலகத்தில் மனம் போன போக்கில் வாழ வைத்துவிடுகின்றது. இந்த அறிவீனமான சிந்தனை மனிதர்களில் எப்படி சீரான நடத்தையினை ஏற்படுத்த முடியும்? மாட்டிக் கொள்ளாமல் திருடு!! மாட்டிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்!! என்ற நடத்தையியலைதான் இந்த அறியாமை கற்றுக் கொடுத்து நடைமுறையாக்கியுள்ளது. 



பண்பாடு, கலாசாரத்தில் அறியாமை

அறிவியல் உலகத்தின் சிந்தனையிலும், நம்பிக்கையிலும் ஏற்பட்ட அறியாமை அதன் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் பல்வேறு அறியாமைகளை தோற்றுவித்தது. மதங்களைப் புறக்கணித்த அறிவியல் உலகம் அவற்றின் நம்பிக்கை கோட்பாடுகளை மட்டுமன்றி அவை போதித்த ஒழுக்கங்களையும் புறக்கணிக்கத் தொடங்கின. தனி மனிதன், குடும்பம், சமூகம் இவற்றின் சுபீட்சத்திற்காக எல்லா மதங்களும் பெரும்பாலும் ஒரே வகையான ஒழுக்க விழுமியங்களை போதிக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் புறக்கணித்து தமது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான கலாசாரமொன்றையும், அதற்கேற்ற பண்பாடுகளையும் அறிவியல் உலகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது



பெண்கள் அரை நிர்வாணத்தோடு அலைவதே உயர் கலாசாரத்தின் அடையாளம் என்று அறிவியல் உலகம் கருதுகின்றது. பெண்கள் தம் உடலை மறைப்பதை பிற்போக்குத்தனமென்றும், அடக்குமுறை என்றும் அறிவியல் உலகம் உரத்துச் சொல்கின்றது. சில நாடுகள்; பெண்கள் தமது முழு உடலையும் மறைப்பதை குற்றமாக்கி அதற்கு தடை விதிக்கவும் எத்தணிக்கின்றன. பெண்களின் அழகை வெளிப்படுத்தி அதனை உயர் கலாசாரமாகக் கருதும் விடயத்தை இஸ்லாம் அறியாமைக் கலாசாரமாகவே அடையளாளப்படுத்துகின்றது. تبرج الجاهلية 'தபர்ருஜூல் ஜாஹிலிய்யா' என்ற பதப்பிரயோகத்தின் மூலம் அல்லாஹூத்தஆலா பெண்கள் தம் அழகை பிறருக்கு வெளிப்படுத்துவதை அறியாமைக் கலாசாரம் என்று குறிப்பிடுகின்றான். சுதந்திரத்தின் பெயரால் பெண்களை வீதிக்கு கொண்டு வந்ததன் விளைவை அறிவியல் உலகம் நன்றாகவே அனுபவிக்கின்றது. ஒரு பெண் எத்தனை ஆண்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தன் விளைவே அறிவியல் உலகில் குடும்ப அமைப்பின் சிதைவுக்குக் காரணமாகியது. 

அறிவியல் உலகின் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் ஏற்பட்ட அறியாமை மதுவோடும், போதையோடும் காலம் கழிக்கின்ற இளைஞர்களையும், பள்ளிப் பருவத்திலேயே கற்பம் தரிக்கின்ற யுவதிகளையும் கொண்ட ஒரு பரம்பரையை தோற்றுவித்துள்ளது.



ஆட்சியியலில் அறியாமை 

கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்கு அதிகாரம்மிக்க தலைமை என்பது இன்றியமையாதது. இந்த அதிகாரத்தை சமூகம் ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. சமூகத்தின் உயிர்,பொருள், மானம், நம்பிக்கை என்பவைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற வகையில் சட்டங்களை அமுல்படுத்துவதும், சமூகத்தின் உலக, மறுமை சுபீட்சத்திற்காக உழைப்பதுமே ஆட்சியாளாகளின் கடமையாகும். 

அறிவியல் உலகம் இரண்டு வகையான ஆட்சி முறைகளை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. ஜனநாயகம், சோசலிஷம் ஆகிய இவ்விரு முறைமைகளில் சோலிஷம் தோல்வி கண்டுவிட்டது. ஜனநாயக அரசியல் பணமும்,பலமும் கொண்டவர்களின் கைகளில் அதிகாரம் சென்றடைவதையே நடைமுறையாக்கியுள்ளது.



அறிவியல் யுகத்தின் ஆட்சியியலை சூழ்கொண்டிருக்கின்ற மிகப் பெரிய அறியாமை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களால் சமூகத்தை வழிநடத்த முனைவதாகும். இறைவனால் இறக்கப்பட்ட சட்டங்களை புறந்தள்ளிவிட்டு, மனிதன் தன் விருப்பு,வெறுப்புக்களின் அடிப்படையில் இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இஸ்லாம் அறியாமையாகவே நோக்குகின்றது. இதனைحكم الجاهلية - 'ஹூக்முல் ஜாஹிலிய்யா' (அறியாமையின் ஆட்சி) என்று அல்லாஹூத்தஆலா குறிப்பிடுகின்றான்.
'அவர்கள் அறியாமையின் ஆட்சியையா விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு, அல்லாஹ்வைத் தவிர சிறந்த ஆட்சியாளன் வேறு யார் இருக்க முடியும்?' (அல்-மாஇதா : 50) என்று அல்-குர்ஆன் வினவுகின்றது.

அறிவியல் உலகம் ஆட்சியியலில் கொண்டிருக்கின்ற இந்த அறியாமையினால் குற்றங்கள் பெருகிய ஓர் உலகத்திலேயே எம்மால் வாழ முடிகின்றது. கொலை, கொள்ளை, ச10து, கற்பழிப்பு, விபச்சாரம் என்பவை நாளாந்த செய்திகளாகி விட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் விபச்சாரம், மது, ச10து என்பவை அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரத்தோடு மேற்கொள்ளப்பட்டால் குற்றமல்ல, அனுமதியின்றி மேற்கொள்வதுதான் தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்வதுதான்.

இறை சட்டங்களை ஆட்சியியலிருந்து ஒதுக்கிய அறிவியல் யுகத்தின் அறியாமை மனித சமூகத்தின் வளமான இவ்வுலக வாழ்வின் சீரழிவுக்கு காரணமாகியதோடு, அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்துக்கும், மறுமை ஈடேற்றத்துக்குமான உரிய பெறுமானத்தை வழங்கவும் தவறிவிட்டது. 'மனிதர்களின் உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் வளப்படுத்துவதே ஆட்சியாளர்களின் கடமை' என்ற இமாம் இப்னு கல்தூனின் கூற்றின்படி அறிவியல் உலகின் ஆட்சியாளர்கள் தமது கடமையினைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அறியாமையிலேயே இருக்கின்றனர். 


வஞ்சம் தீர்க்கும் அறியாமை

அறிவியல் உலகின் அறியாமைகளுள் இதுவும் ஒன்று. சமூகங்களுக்கு மத்தியில் குரோதம் வளர்ப்பதும், வஞ்சம் தீர்ப்பதும், ஆக்கிரமிப்புச் செய்வதும் அறியாமையின் பண்பென்றே அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதனை حمية الجاهلية 'ஹமிய்யதுல் ஜாஹிலிய்யா' என்று அல்லாஹூத்தஆலா குறிப்பிடுகின்றான். ஹூதைபிய்யா உடன்படிக்கை எழுதப்பட்ட போது அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் வசனத்தைச் சேர்த்துக் கொள்வதை மக்கத்து காபிர்கள் விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் மீதும், முஃமீன்கள் மீதும் மக்கத்து காபிர்கள் ஏற்கனவே கொண்டிருந்த காழ்ப்புணர்வும், குரோதமுமே அதற்குக் காரணமாகும். இவர்களின் இப்பண்பைக் குறிக்கவே அல்-குர்ஆன் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.




இன்றைய அறிவியல் உலகத்திடமும் இத்தகைய காழ்ப்புணர்வும், குரோதமும் குடிகொண்டிருப்பதையே அவர்கள் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. அறிவியல் புரட்சியில் கிறிஸ்த்தவ அறிவியலாளாகளோடு யூத சமூகமும் இணைந்து கொண்டது. இவ்விரு சமூகத்தினதும் பொது எதிரியாக முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது. கிறிஸ்த்துவை கொன்றதாக நம்பப்படும் யூத சமூகத்தோடு உறவு பாராட்டும் கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம் சமூகத்தோடு பகைமைப் பாராட்டவே முனைகின்றது. சிலுவை யுத்தத்தின் தோல்விகளை கிறிஸ்த்தவ ஐரோப்பா மறக்காமையும், முஸ்லிம் தேசங்களிலுள்ள வளங்களை சூறையாடுவதுமே இந்த பகைமைக்குக் காரணமாகும்.

அறிவியலில் உச்சத்தை அடைந்து சாதனைப் படைக்கும் அறிவியல் உலகம் சமூகங்களுக்கு மத்தியில் குரோதம் வளர்ப்பதையும், அதனூடாக ஆக்கிரமிப்புச் செய்வதையும் அறியாமை என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அறிவியல் உலகம் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்து சுரண்டிய வளங்களினால்தான் தனது வளர்ச்சிக்கான அடித்தளத்தையிட்டுக் கொண்டது. 15ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு வெறி இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை. இலட்சக் கணக்கான உயிர்களை கொன்று குவித்து அறிவியல் உலகம் தன் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே எத்தணிக்கின்றது. அதன் இந்த அறியாமை முழு மனித குலத்தின் அழிவுக்கும் காரணமாகும் என்பதை அது அறியாமல் இருப்பது எத்தகைய அறியாமை?


எனவே...

இன்றைய உலகு 'அறிவியல் உலகம்' என்று அழைக்கப்பட்டாலும் அது மிகப் பெரிய அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது என்பதே உண்மையாகும். இன்றைய அறிவியல் யுகத்தின் வளர்ச்சி என்பது ஒரு பக்கம் வீங்கிய வளர்ச்சியே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல. இந்த நிலையை இந்தியக் கவிஞர் ரவீந்த்ரநாத் தாஹூர் அழகாகக் குறிப்பிடுகின்றார். 
'மனிதன் நீரிலே நனையாமல் எப்படி மிதப்பது என்பதை அறிந்து கொண்டான். ஆகாயத்தில் சிறகின்றி பறப்பது எப்படியென்றும் அறிந்து கொண்டான். ஆனால் பூமியில் எப்படி நடப்பது என்பதை அவன் மறந்துவிட்டான்' என்று தனது கவிதையொன்றில் குறிப்பிடுகின்றார். ஆம், அறிவியல் உலகம் மனித வாழ்வை இலகுபடுத்திக் கொடுக்கும் சாதனங்களை அவனுக்குக் கொடுக்கின்றனவே தவிர மனித நடத்தைக்கான வழிகாட்டல் விடயத்தில் அறியாமையிலேயே இன்னும் இருக்கின்றது.

அறிவியல் உலகம் வஹியைப் புறக்கணித்ததே இந்த அறியாமைகளுக்கெல்லாம் காரணம். அறிவியல் யுகத்தில் வருடத்துக்கு பல லட்சம் அறிவியலாளர்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர். பல்லாயிரம் ஆய்வுகள் வருடம் தோறும் எழுதப்படுகின்றன. ஆனால் குற்றங்கள் அதிகரிக்கின்ற, அநாகரிகமான உலகொன்றையே எம்மால் காண முடிகின்றது. படைப்பாளன் பற்றிய நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் போதிக்காத அறிவியல் உலகத்தின் கலாசாலைகள் 'அறிவுள்ள பிசாசுகளையே' உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில், வஹியைச் சுமந்த சமூகம் மற்றொரு வகையான அறியாமையில் மூழ்கியிருக்கின்றது. தலைமைத்துவமின்மை, சிந்தனைக் கோளாறு, கோழைத் தனம், சோம்பேறித்தனம், திட்டமிடலின்மை, மேற்கத்தேய கலாசாரம் போன்ற அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது. அறிவியலையும், வஹியையும் எம் சமூகமும் இன்னும் பிரித்தே வைத்திருக்கின்றது. 

வஹியோடு இணைந்து இன்றைய அறிவியல் உலகம் தன் பயணத்தைத் தொடருமென்றால், நிச்சயமாக இவ்வுலகம் ஒரு தூய தேசமாக மலரும். அத்தகைய ஒரு தூய தேசமே எம் அனைவரினதும் பேரவாவாகும்.

~ அஷ்ஷெய்க் S. H. இஸ்மத் அலி (நளீமி) M.A. ~

0 comments:

Post a Comment