Monday, August 26, 2013நபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவரது வரலாற்றை வாசிக்கின்ற எவரும் உணர்ந்து கொள்வார்கள். மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் நிறுவிய அரசானது சமகாலத்திலிருந்த ரோம, பாரசீக, இந்திய மற்றுமுண்டான பாரம்பரிய அரசுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டிருந்தது. அவ்வரசுகள் ஆட்சியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருந்த அதேவேளை நபிகளாரின் அரசானது மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. மக்களின் நலன் என்பது மனித சட்டங்களால் நிலைநாட்டப்பட முடியாதது. ஏனெனில் மனித சட்டங்கள் சார்புநிலைத் தன்மையைக் கொண்டவை. மட்டுமல்ல பாரபட்சமுடையவை. எனவே மக்கள் நலன்களை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையில் இறைசட்டங்களை அடிப்படையாக் கொண்ட அரசாக மதீனா அரசு உருவாக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசானது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டமைந்தது என்ற வகையில், அது ஆட்சியாளன் என்ற தனி மனிதனிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதை தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் இறைதூதராக இருந்த போதிலும் நாட்டின் நிர்வாக மற்றும் நடைமுறை விவாகரங்கள் தொடர்பில் எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுக்கின்றவராக இருக்கவில்லை. இவ்விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கென நபி(ஸல்) அவர்கள் 03 முக்கிய அமைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள்.

1) முஅஸ்ஸஸதுல் உமரா

2) முஅஸ்ஸஸதுன் நுகபா

3) மஜ்லிஸூஸ் ஷூறா


முஅஸ்ஸஸதுல் உமரா என்பது
முஹாஜிரீன்களின் பத்து சஹாபாக்களைக் கொண்ட அமைப்பாகும். இச்சபையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அபூஉபைததிப்னுல் ஜர்ராஹ், ஸஃத் பின் அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ப், ஸஈத் பின் சைத் (ரழியல்லாஹூ அன்ஹூம்) ஆகியோர் அங்கம்வகித்தனர்.


முஅஸ்ஸஸதுன் நுகபா என்பது
நபி (ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கு முன்னரே உருவாகப்பட்ட அமைப்பாகும். இச்சபையானது அன்சாரி ஸஹாபாக்களின் பன்னிரெண்டு பேரை கொண்டமைந்திருந்தது. இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது 'உங்களில் பன்னிரெண்டு பேரைத் தெரிவு செய்து எனக்குச் சொல்லுங்கள். தமது கோத்திரத்தாரின் பிரதிநிதிகளாக அவர்கள் செயற்படுவார்கள்' என்ற நபிகளாரின் கட்டளைக்கேற்ப, கஸ்ரஜ் கோத்திரத்திலிருந்து ஒன்பது பேரையும், அவ்ஸ் கோத்திரத்திலிருந்து மூன்று பேரையும் அன்சாரிகள் தெரிவு செய்தனர் என்று வரலாற்றாசிரியர் இப்னு ஹிசாம் குறிப்பிடுகின்றார்.


இவ்விரு சபைகளின் பிரதிநிதிகளோடு சேர்த்து நபிகளாரின் மஜ்லிஸூஸ் ஷூறாவானது 70 சஹாபாக்களைக் கொண்டமைந்திருந்தது என்பது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர் முஹம்மத் அம்மாராவின் கூற்றாகும். பத்ர் யுத்த கைதிகள் விடயத்தில் நபிகளார் மேற்கொண்ட ஆலோசனை, கந்தக் யுத்தத்தில் ஸல்மானுல் பாரிஸி (ரழி) ஆலோசனைப் பிரகாரம் செயற்பட்டமை, மட்டுமன்றி, பல போது சஹாபா பெண்மணிகளிடம் கூட நபிகளார் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸிலே 'தமது தோழர்களிடத்தில் ஆலோசனை நடத்துவதில் நபி (ஸல்) அவர்களைப் போன்று அதிகமாக ஆலோசனை நடத்துகின்ற எவரையும் நான் கண்டதில்லை' என்று அறிவித்துள்ளார்கள்.


இஸ்லாமிய அரசில் சட்டவாக்க அதிகாரம் என்பது அல்லாஹூக்குரியது. அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசு பரிபாலிக்கப்பட வேண்டும். இவ்விரண்டு சட்ட மூலாதாரங்களில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பில் இஜ்திஹாதின் மூலம் முடிவுகளைப் பெறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் சுதந்திரமளித்துள்ளது. ஆனால் இம்முடிவுகள் குர்ஆன், சுன்னா, இஜ்மா என்பவற்றுக்கு முரணில்லாத வகையிலும் - பலரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பெறப்பட்ட முடிவுகளாக அமைய வேண்டும். ஏனெனில் ஒரு தனிமனிதனின் முடிவு எப்போதும் மிகச் சரியானதாகவோ, சரியானதாகவோ அமையும் என்று கூற முடியாது.


மேலும் அல்-குர்ஆன், சமூக தளத்தின் மூன்று முக்கிய அலகுகளான குடும்பம், சமூகம், நாடு என்பவற்றின் தீர்மானங்கள் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. குழந்தைக்குப் பால்குடி மறக்கடிக்கப்படும் விடயம் கணவன்-மனைவி ஆகிய இருவரினதும் ஆலோசனையின் பிரகாரம் அமைய வேண்டும் என்பது அல்-குர்ஆனின் கட்டளையாகும். மேலும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக 'ஆலோசித்தல்' என்பதை அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.

"அவர்கள்தமது இரட்சகனின் அழைப்புக்கு பதிலளித்தார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டினார்கள். தமது விடயங்கள் தொடர்பில் தமக்கு மத்தியில் ஆலோசித்துக் கொண்டார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளிலிருந்து செலவு செய்வார்கள்" ( சூறதுல் ஷூறா : 38). 

இவ்வசனத்தில் ஆலோசித்தல் தொழுகைக்கும் இறை பாதையில் செலவு செய்வதற்குமிடைப்பட்ட தரத்திலுள்ள பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை சமூக வாழ்வில் ஆலோசனையின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்றது.

குடும்ப மற்றும் சமூக விவகாரங்களில் ஆலோசனை நடத்துவதை வலியுறுத்தும் இஸ்லாம் நாட்டின் ஆட்சியியல் விவகாரத்தில் அதனை ஒரு கடமையாக ஆக்கியுள்ளது. "அவர்களின் விடயங்கள் தொடர்பாக அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வீராக!" (ஆல-இம்றான்:159) என்ற அல்-குர்ஆனிய வசனத்திற்கு விளக்கமளிக்கும் இமாம் இப்னு அதிய்யா (ஹி:481-542) ' ஷூறா (கலந்தாலோசனை) என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை அம்சமாகும். யாரொருவர் மார்க்க மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனையின்றி செயற்படுகின்றார்களோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்குவது கடமையாகும்' என்று குறிப்பிடுகின்றார்.

பிறரின் ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு தனியொரு மனிதனின் விருப்பங்களும், கருத்துக்களும் அதிகாரம் செலுத்த முற்படுகின்ற போது அதன் விளைவு சமூகத்தினதும், அரசினதும் அழிவாகவே அமையும் என்பது வரலாறு சொல்லும் சாட்சியாகும். உண்மையில் அதிகாரம் தனி மனிதர்களிடம் குவிக்கப்படுகின்ற போது தன்னை மிகைக்க எவருமில்லை என்ற எண்ணத்தையும், தற்பெருமையையுமே அது ஆட்சியாளர்களிடம் குடிகொள்ளச்செய்யும். இந்நிலையானது, ஆட்சியாளனை 'நானே கடவுள்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவனில் தற்பெருமையை உருவாக்கிவிடும் என்பதற்கு அல்-குர்ஆன் கூறும் பிர்அவ்னின் வரலாறு உதாரணமாகும். 

நவீன கால அரசுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை யாப்பின் ஊடாக வரையறுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அனேகமான நாடுகளில் நாட்டின் தலைவர் அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியின் விருப்புக்களும், கருத்துக்களும் மட்டுமே மக்கள் விருப்பங்களாக பிரதிபலிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையையே நாம் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு இத்தகைய குவிக்கப்பட்ட அதிகாரமே பிரதான காரணியாகும் என்றால் அது மிகையல்ல. 

ஒரு தேசத்தில் அதிகாரம் தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்றதென்றால் அங்கு மக்கள் விருப்புக்கோ அல்லது அவர்களின் நலன்களுக்கோ எவ்வித பெருமானமும் வழங்கப்படவில்லை என்பதே அதன் கருத்தாகும். இத்தகைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி என்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு பிர்அவ்னின் அதிகாரத்திற்கு எதிராக மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களுடன் இணைந்து மேற்கொண்ட புரட்சியும், இற்றைய நாட்களில் டியூனீசியா, எகிப்து, லெபனான், யமன் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிகளும் சான்றாகும்.

எனவே ஒரு தேசத்தின் நிலைத்த தன்மைக்கும், அதன் உண்மையான அபிவிருத்திக்கும், மக்கள் சுபீட்சத்திற்கும் அடிப்படையாக அமைவது குவிக்கப்படாத அதிகாரமும், நபிகளார் காட்டித்தந்த ஆலோசனை முறைமையுமே என்பது தெளிவாகும்.  சிறுபான்மை சமூகம் என்ற வகையில் இந்நாட்டு முஸ்லிம் சமுகம் இப்பண்பைப் பெற்றிருப்பது இன்றியமையாததாகும். எமது பாடசாலைகள், பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களின் தேசிய அரசியல் விவகாரங்களும் இத்தகைய 'ஷூறா' – ஆலோசனையின் அடிப்படையில் அமைவதே எமது விடிவுக்கான ஒரே வழியாகும்.

ஆனால் நடைமுறையில் எமது சமூகம் இப்பண்பைப் பெற்றிருக்கின்றதா என்பது கேள்விக் குறியே. எமது பெற்றோர்களில் எத்தனை பேர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஆலோசித்து திட்டமிடுகின்றனர்?. எமது பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து எத்தனை அதிபர்கள் சக ஆசிரியர்களிடமும், மாணவர்கள்கள், பெற்றோர்களிடமும் ஆலோசனை நடத்துகின்றனர்?. எமது பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் பலதரப்பட்டோரினதும் ஆலோசனை அடிப்படையிலான தீர்மானங்களாகவா அமைகின்றன? ஏன், எமது அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் எடுக்கின்ற முடிவுகள் எமது சமூகத்தின் புத்திஜீவிகளையும், ஆலிம்களையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்தாலோசித்தா மேற்கொள்ளப்படுகின்றன? மேற்குறிப்பிட்ட விடயங்களில் எடுக்கப்படுகின்ற தொண்ணூறு வீதமான முடிவுகள் ஒரு சில தனிமனிதர்களின் விருப்புக்களாக அமைகின்றனவே தவிர மக்களின் விருப்புக்களாக அமைவதில்லை.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை நாம் சில தனிமனிதர்களின் கைகளில் விட்டுவைத்திருக்கிறோம்.அவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அவர்களின் தனிப்பட்ட நலன் அல்லது கட்சியின் நலன் சார்ந்த வகையில் அமைகின்றனவே தவிர சமூகத்தின் நலன்சார்ந்த வகையில் பெரும்பாலும் அமைவதில்லை. இது ஒரு வகை மறைமுக எதேச்சதிகாரமேயன்றி வேறில்லை. எனவே நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்களை, சூறா - கலந்தாலோசனை மூலம் மேற்கொள்வதற்கென புத்திஜீவிகள், ஆலிம்கள், துறைசார் அறிஞர்கள், நலன்விரும்பிகள், இயக்கத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும்.மட்டுமன்றி ஒரு சமூகக் கடமையாகும். 

ஏனெனில் ஆலோசித்து பெறப்படுகின்ற முடிவுகளில்தான் ”பரகத்தும்”, அல்லாஹ்வின் உதவியும் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களுக்கு கூறிய உபதேசத்தில் ஆலோசனையை வலியுறுத்தும் வகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள், "அவர்ளோடு ஆலேசித்து முடிவுகளை எடுப்பீராக. ஏனெனில் ஆலோசனை சொல்பவர் உதவியாளர் ஆகின்றார். ஆலோசனை பெறுபவர் பாதுகாப்புப் பெறுகின்றார்". (ஆதாரம் : சுனன் அபூதாவூத்)


~ அஷ்ஷெய்க் S. H. இஸ்மத் அலி (நளீமி) M.A. ~

0 comments:

Post a Comment