Sunday, August 25, 2013ஒவ்வொரு முஸ்லிமும் தனியே அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (பர்ளு ஐன்) இருப்பது போலவே தாம் வாழும் பிரதேசத்தில்; கூட்டாகச் செய்ய வேண்டிய கடமைகளும் (பர்ளு கிபாயா) இருக்கின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இத்தகைய கூட்டுப் பொறுப்புக்களின் பிரதான இலக்கு அல்லது இவற்றின் ஆணிவேர் இஸ்லாம் காட்டும் வாழ்க்கைத் திட்டத்தை தாம் வாழும் பிரதேசத்தில் நடைமுறைப் படுத்துவதாகும். வேறு வார்த்தையில் கூறுவதென்றால்; வாழ்வின் அனைத்து சிறிய, பெரிய பகுதிகளுக்குமான இஸ்லாத்தின் கச்சிதமான வழிகாட்டுதல்களை சந்தேகமின்றி நம்பி அவற்றை ஏனைய அனைத்து சித்தாந்தங்கள், கொள்கைகள் காட்டும் வாழ்க்கைத் திட்டங்களை விட மேலோங்கச் செய்து, அனைவராலும் வாழ்வின் எல்லா விடயங்களிலும்; எடுத்து நடக்கும் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஏனெனில் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தையும், மனிதர்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனின் வழிகாட்டுதல்களே என்றென்றும் மனித வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமானதாகவும், மனிதன் எதிர்பார்க்கும் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கின்றது. இதுவே இன்று உலகில் பரந்து கிடக்கும் அனைத்து விதமான பாவ காரியங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைக்கக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

ஆகவே, இந்த இஸ்லாத்தின் தீர்வுத் திட்டத்தை நாமும் நடைமுறைப் படுத்தி ஏனையவர்களுக்கும் இதனை தெளிவுபடுத்தி இதன்பால் அழைப்புவிடுத்து நடைமுறைப் படுத்த வேண்டிய முஸ்லிம்களாகிய எம்முள் இது தொடர்பான சில பிழையான பதிவுகள் காணப்படுகின்றன. 

அவற்றுல் ஒன்று, முழு முஸ்லிம் சமூகத்தையும் திருத்தி ஒழுங்குபடுத்திவிட்டதன் பின்பு தான் நாம் ஏனையோருக்கு இம் மார்க்க விழுமியங்கள் பற்றி கூற வேண்டும், இதன்பால் அழைப்பு விடுக்க வேண்டும். “ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றுபவர்களின் எண்ணிக்கை ஜுமுஆத்  தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு என்று சமனாகுமோ அன்று தான் முஸ்லிம்களுக்கு வெற்றி வரலாம் அல்லது அதுவரை இப்பூவுலகில் இஸ்லாத்திற்கு வெற்றி; கிட்டாது” என்று ஒரு பதிவும் பொதுவாகக் காணப்படுகின்றது. அதாவது “முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முழுமையாக பாவத்திலிருந்து மீண்டு அல்லாஹ்வுக்குரிய தனிமனிதக் கடமைகளை பூரணமாக நிறைவேற்றிய பின்பே சமூகக் கடமைகள் தொடர்பாக சிந்திக்க, செயற்பட ஆரம்பிக்க வேண்டும். மாத்திரமல்ல அதன் பின்னரே ஏனையவர்களுக்கும் இஸ்லாத்தின் தூதை எத்தி வைக்க வேண்டும்” இது இஸ்லாத்தின் கருத்தன்று, மாறாக முஸ்லிம்களிடம் புகுத்தப்பட்ட புதுமையான கருத்தே. 

உஹத் யுத்தம் இது தொடர்பாக அழகானதொரு  வரலாற்றுப் பாடத்தினைக் கற்றுத்தருகின்றது. அது தோல்விக்குரிய உண்மையான காரணங்களை தெளிவுபடுத்துகின்றது. ஹிஜ்ரி 03 இல் உஹத் மலைக்கருகில் நடைபெற்ற இந்த யுத்தத்திற்கான ஏற்பாடுகளுடன் நபியவர்கள் போர் வீரர்களை அழைத்துச் செல்லும் வழியில் ‘ஷைகான்’ எனுமிடத்தில் இரவு தங்கியிருந்து அதிகாலையில் எழுந்து படையுடன் ‘அஷ்ஷவ்த்’ என்ற இடத்தை அடைந்து பஜ்ர் தொழுகையை நிறைவேற்றியதுதான் தாமதம் முஸ்லிம்களோடு ஒன்றாக இருந்த நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபை படையில் மூன்றில் ஒரு பகுதியினரான 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாது திரும்பி விட்டான். போலியான காரணங்களைக் கூறி முஸ்லிம்களில் பலவீனர்களை தன்வசப்படுத்தி போர் செய்யாது அவர்களையும்; பின்வாங்கச் செய்தான். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் மீதமுள்ள வீரர்களை அழைத்துக் கொண்டு எதிரியை நோக்கிப் புறப்பட்டார்கள். குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் அம்பெய்துவதில் மிகத் தேர்ச்சி பெற்ற 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக அப்துல்லாஹ் இப்னு ஸஷுபைர் (றழி) அவர்களை நியமித்து முஸ்லிம்களின் இராணுவ முகாமிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மலையில் நின்று முஸ்லிம்களை எதிரிகள் பின்னால் வந்து தாக்காது பாதுகாக்குமாறு பணித்தார். மாத்திரமல்ல “நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும், நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும், எங்களைப் பறவைகள் கொத்தித் திண்பதைப் பார்த்தாலும் நான் உங்களுக்கு செய்தியனுப்பும் வரை இம்மலையிலிருந்த கீழிறங்கி வர வேண்டாம்” என ஆணை பிறப்பித்தார்கள். 

போராட்டம் ஆரம்பமாகி முஸ்லிம்கள் முன்னேறிக் கொண்டே சென்றனர். படிப்படியாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவர்கள் வெற்றியடைந்து எதிரிகளின் பொருட்களை சேகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பெறி வீரர்கள் பலருக்கு பொருட்களைச் சேகரிக்கும் உலக ஆசை மேலோங்கியது, மலையிலிருந்து கீழிறங்க முற்பட்டனர். உடனே அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த தலைவர் நபியவர்களின் கட்டளையை நினைவூட்டினார். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல்; மலையிலிருந்து கீழிறங்கி வந்து வெற்றிப் பொருள் சேகரிக்க ஆரம்பித்தனர். மலையில் பத்திற்கும் குறைவானவர்களே பாதுகாப்புப் பணியில் எஞ்சியிருந்தனர். இந்த அரிய சந்தர்ப்பத்தைக் கண்ணுற்ற பின்வாங்கி ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த எதிரிப் படையினர் மீண்டு வந்து  முஸ்லிம்களைப் பின்புறத்தால் தாக்கினர். ஏதிர்பாராத இத் தாக்குதலில் முஸ்லிம்கள் நிலைகுழைந்தனர், பலத்த தாக்குதலுக்கு உள்ளாகினர். நபியவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (றழி) உற்பட 70 பேர் ஷஹீதாக்கப்பட்டனர், நபியவர்கள் காயப்பட்டார்கள், இறுதியில் முஸ்லிம்களுக்கு தோல்வியைத் தழுவ வேண்டி ஏற்பட்டது. 

இந்த உஹத் யுத்தம் கற்றுத்தரும்; அற்புதமான பாடம் என்னவென்றால் யுத்தத்தின் இறுதியில் முஸ்லிம்கள் பெருந்தோல்வியைத் தழுவியமைக்கான காரணமாகவோ அல்லது பல காரணங்களில் ஒரு காரணமாகவோ அப்துல்லாஹ் இப்னு உபையுடன் இடை நடுவே பின்வாங்கிச் சென்ற பலவீனப்பட்ட முஸ்லிம்கள் குறிப்பிடப்படவில்லை மாறாக உறுதிமிக்க வீரர்கள் தமக்குள் பிளவுபட்டு தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படாது உலக ஆசையின் பின்னால் அள்ளுண்டு சென்று கடமையை மறந்தமையே குறிப்பிடப்படுகின்றது. இதனையே தோல்விக்கான காரணமாகவும் அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்குக் கற்றுத்தருகின்றான்

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான் (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள், நீங்கள் (உங்களுக்கு இடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள், நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்தரவுக்கு மாறு செய்யலானீர்கள், உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான், நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான். (3:152)

பலவீனப்பட்டு மாயக்கார முனாபிக்கின் பேச்சில் மயங்கி புறமுதுகு காட்டிச் சென்றவர்களை அல்லாஹ் முஸ்லிம்களின் தோல்விக்குரிய காரணமாகக் குறிப்பிடப்பிடவில்லை. 

ஆகவே, முஸ்லிம்களில் பாவங்களிலும் பெரும் பாவங்களிலும் பகிரங்கமாக ஈடுபடுவோர் என்றும் இருப்பார்கள், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காட்டிக் கொடுப்போர் என்றென்றும் இருப்பார்கள், முனாபிக்குகளும் இருப்பார்கள். இத்தைகையவர்கள் நம்மத்தியில் இருக்கின்றார்கள் என்பதனால் முஸ்லிம்களாகிய எமது வெற்றி பிற்போடப்படுகின்றதா? அல்லது இத்தகைய மனிதர்களால் தான் முஸ்லிம் சமூகம் நாளாந்தம் தோல்வியைத் தழுவுகின்றதா? என்று வினாத் தொடுத்தால் இல்லை. மாறாக, இஸ்லாத்தின் வழிகாட்டுதலே ஈருலக வெற்றிக்கு வழி என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு அதனை உண்மைப் படுத்தவும், இஸ்லாத்தை நாம் வாழும் பிரதேசத்தில் மேலோங்கச் செய்யவும் நம் மீது அல்லாஹ் சுமத்தியிருக்கின்ற கடமை என்பதனை உணர்ந்து இஸ்லாத்தின் எழுச்சிக்கு தோல் கொடுக்க முன்வந்த நாம் தம்முள் ஒன்றுபடாமலும், பிளவுக்கு மேல் பிளவு பட்டிருப்பதும், ஒரு தலைமைத்துவத்தில் ஒன்று படாமல் இருப்பதும், உலக ஆசையும் பாவத்தின் சுவையும் எம்மை ஆட்கொண்டிருப்பதுமே எமது பின்னடைவுக்குக் காரணமாகும்.  முஸ்லிம் சமூகத்தை சீரமைப்பதில் (இஸ்லாஹ்) மாத்திரம் அதிக கவனம் அல்லது முழுக் கவனம் செலுத்தி ஏனைய பணிகளை மறந்திருப்பதும் ஒரு பிரதான காரணம் என்றால் அதில் பிழையிருக்காது. 

எனவே, இஸ்லாத்தின் வெற்றியை சமீப காலத்தில் ஆசிப்பவர்களாகிய நாம், வழிமுறைகளில் வேறுபட்டாலும் அமைப்பு ரீதியாக வேறு பெயர் தாங்கியிருந்தாலும்,  கொள்கையிலும் இறுதி இலக்கிலும்; ஒன்றுபட்டவர்கள் என்ற வகையில் எதிர்கால செயற்திட்டங்களில் ஒன்றுபட்டு செயற்பட யாவரும் முன்வர வேண்டும். எமக்குள் வீணான விமர்சனங்களைக் களைய வேண்டும், உலக ஆசையினதும்; பாவங்களினதும் பின்னால் சென்று பொறுப்பை மறந்து போகாமலும், அர்ப்பண சிந்தையோடு செயற்படவும் முன்வர வேண்டும். தற்போதுள்ள தலைமைகளை மதித்து, அவர்களுடன் அனுசரித்து நடந்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கவும் முன்வர வேண்டும். 

இத்தகைய ஒரு சூழ்நிலையில் உடலாலும் பொருளாலும் உன்னத முயற்சி செய்கின்ற, சொல்லாலும் செயலாலும் இஸ்லாத்திற்கு சான்றுபகர்கின்ற, தன்னையும் தனது குடும்பத்தையும் விட இஸ்லாம் கூறும் சமூகப்பணியே மேலென்று கருதுகின்ற, அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுகின்ற, அவனது அர்ஷில் நிழல் பெறவும், சுவனத்தில் ஒரு பறவையாக உளா வரவும் ஆசிக்கின்ற இஸ்லாத்தை எத்திவைக்க ஒன்றுபட்டு செயற்படுகின்ற ஒரு குழு என்று உருவாகுமோ அன்று முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். 

~ அபூ றாதியா ~

0 comments:

Post a Comment