Wednesday, August 21, 2013



இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாங்கள் மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது பஸராவின் ஆட்சியாளர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஃகில் (ரழி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: "ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சுவனத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்" (ஸஹீஹூல் புகாரி).

 
ஆட்சியாளர்களுக்கும் - குடிமக்களுக்கும் இடையில் நடைபெறும் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வுடன்படிக்கையை மேற்கத்தேய அரசறிவியலாளர்கள் social contract என்றும் முஸ்லிம் அறிஞர்கள் 'பைஅத்' அல்லது 'அல்-அக்துல் இஜ்திமாஇ' என்றும் அழைக்கின்றனர். இதன் கருத்து சமூக உடன்படிக்கை என்பதாகும். மேற்கத்தேய அரசியல் பரிபாசையில் இவ்வொப்பந்தம் உலக நலன் சார்ந்த உடன்பாடாக மாத்திரம் அமைந்திருக்கும். ஆனால் இஸ்லாமிய அரசியல் பரிபாசையில் இப்வொப்பந்தம் உலக மற்றும் மறுமை நலன் சார்ந்த உடன்படிக்கையாக அமைவது அவசியமாகும். இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இரு வகையான கடமைப்பாடுகள் ஆட்சியாளர்கள் மீது பொறுப்பாகின்றன என்று இமாம் மாவர்தி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன : 
 

1) மார்க்கத்தைப் பாதுகாத்தல். ( ஹிராஸதுத் தீன்) 
 

2) உலகத்தை நிர்வகித்தல் (ஸியாஸதுத் துன்யா). 

 

மார்கத்தைப் பாதுகாத்தல்: முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கின்றவர்களின் முதன்மையான பொறுப்பு இதுவாகும். இஸ்லாத்தைப் படிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் வழிகேட்டில் விழாமல் அவர்களை வழிப்படுத்தல், கொள்கை ரீதியாகாவும், நடைமுறை ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது அப்பிரச்சினைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளை செய்வது முஸ்லிம் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். இதனை அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான். "நாம் அவர்களுக்கு பூமியில் அதிகாரத்தை வழங்கினால், தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஸக்காத்தை வழங்குவார்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பார்கள்" (சூறதுல் ஹஜ் : 41)

உலகத்தை நிர்வகித்தல்: மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற இன்னோரன்ன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை நிர்வகிப்பதும் ஆட்சியாளர்கள் மீதுள்ள அடுத்த பொறுப்பாகும். இப்பொறுப்பை அல்குர்ஆனின் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. "அவன் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதனை பரிபாலிக்கின்றவர்களாகவும் உங்களை ஆக்கினான்" (சூறதுல் ஹூத் : 61)

 

எனவே ஆட்சி செய்தல் என்பது அல்லாஹ்வின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மக்களை வழிப்படுத்தல்;, மக்கள் வாழும் வகையில் பூமியை வளப்படுத்தல் ஆகிய இரு வகையான பாரிய பொறுப்புக்களைக் கொண்ட பணியாகும். இப்பொறுப்பை ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தவறும் போது மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர முடியாது என்ற எச்சரிக்கையை நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸிலே நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

மேலும் இந்த ஹதீஸ் தொடரிலே இமாம் புகாரி அவர்கள் பின்வரும் ஹதீஸ்களையும் பதிவு செய்துள்ளார்கள்.

"முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சுவனத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்" (ஸஹீஹூல் புகாரி). 

"விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்" (ஸஹீஹூல் புகாரி). 

நாம் ஏலவே குறிப்பிட்டது போல, அரசியல் அதிகாரத்தை ஆட்சியாளர்கள் மக்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையின் மூலமே பெற்றுக் கொள்கின்றனர். இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் மக்களின் ஈருலக நலனுக்காக உழைப்பது அவர்களின் மீது கடமையாகின்றது. இக்கடமையை நிறைவேற்றுகின்ற நிலையில் அவ்வாட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவது குடிமக்கள் மீது கடமையாகின்றது. இரு தரப்பாரில் யாராவது ஒருவர் தமக்குரிய கடமையில் குறைவிடுகின்ற போது உடன்படிக்கை மீறப்படுகின்றது. உடன்படிக்கையை மீறுவது இஸ்லாத்தின் பார்வையில் பாரிய குற்றங்களில் ஒன்றாகும். 

"ஈமான் கொண்டவர்களே, நீங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை (பூரணமாக) நிறைவேற்றுங்கள்" (சூறதுல் மாஇதா : 01) என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். 

மேலும் உடன்படிக்கைக்கு மாற்றமாக நடந்து கொள்வது நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றாகும். "நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான் பேசினால் பொய்யே பேசுவான் ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புகாரி). மேலும் நபியவர்கள் கூறினார்கள் : மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும். (ஸஹீஹூல் புகாரி). 

மேலுள்ள எச்சரிக்கை வார்த்தைகள் அல்லாஹ்வினாலும், அவனது தூதரினாலும் கூறப்பட்டவைகள். அவை சத்தியமானவை. மக்களுக்கு நலவு செய்வதாகக் கூறி, அவர்களிடம் வாக்குப் பிச்சைக் கேட்டு, பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து போகும் சுய நல அரசியல்வாதிகள் இந்த வார்த்தைகளுக்கு அச்சப்படுவார்களா?. அரசியல் என்பது உழைத்துக் கொள்வதற்கான ஒரு தொழிலாக இன்று மாறிவிட்டது. மக்களை ஏமாற்றி அல்லது அராஜகம் செய்து தேர்தல்களில் வெற்று பெற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்கள், தமது ஆட்சிக் காலம் முடியும் வரையில் சுரண்டல், இலஞ்சம், களவு போன்ற ஹராமான வழிகளில் முடியுமான அளவுக்கு சொத்து சேர்ப்பதற்கே தமது முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர். மக்களின் நலன் பற்றி சிந்திப்பதற்கோ, அவர்களுக்காக பணியாற்றவோ அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய அநீதியாளர்கள் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாம். ஆனால் அவர்களால் அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியாது. சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர்வதற்கு அல்லாஹூத்தஆலா அனுமதிக்கப் போவதில்லை. 

மேலும் நாம் மற்றுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தியாக வேண்டும். ஏனைய இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உலக நலனை மாத்திரம் கருத்திற் கொள்பவர்கள். ஆனால் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அவ்வாறு இருக்க முடியாது. அவர் தமது சமூகத்தின் மறுமை நலனுக்காக உழைக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்பொறுப்பை உணர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை எமது சமூகம் மிகக் குறைந்தளவிலேயே கொண்டிருக்கின்றது. இது துரதிஸ்டவசமான நிலையாகும். தேர்தல் மேடைகளில் பாதை அமைத்துத் தருவதாகவும், பாலம் கட்டித் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் எமது அரசியல்வாதிகள் அப்பிரதேசத்தின் மார்க்க மற்றும் ஒழுக்க ரீதியான வீழ்ச்சி நிலைக் குறித்து ஒரு வார்த்தையாவது பேசும் நிலையிருப்பதாகத் தெரியவில்லை. 

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் சமூகத் தலைமைத்துவத்தையேற்றவர்கள் உலக மற்றும் ஆன்மீக தலைமைத்துவத்தை சமூகத்திற்கு வழங்குகின்றவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரலாற்றை மறந்த நிலையிலேயே எமது சமூகத்தின் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணமும் கழிந்திருக்கிறது. ஆன்மீகமில்லாத அரசியல்வாதிகளும், அரசியல் தெரியாத ஆன்மீகவாதிகளையும் கொண்ட சமூகம் என்ற நிலை மாற வேண்டும். 

இந்த ஹதீஸின் மூலம் நாம் தெளிவுபெற வேண்டிய மற்றொரு விடயமும் இருக்கின்றது. இந்த ஹதீஸை மஃகில் இப்னு யஸார் (ரழி) அவர்கள் வெறுமனே ஹதீஸ் பாட போதனை வகுப்பொன்றில் அறிவிக்கவில்லை. பஸராவின் கவர்னராக இருந்த உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் என்பவருக்கு உபதேசிக்கும் வகையிலேயே அறிவிக்கின்றார்கள். ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உலமாக்களின் பொறுப்பு என்பதை மஃகில் (ரழி) அவர்களின் இச்செயல் எமக்குக் கற்றுத் தருகின்றது. 

ஆட்சியாளர்களுக்கும் - ஆலிம்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவிருக்க வேண்டும். அவ்வுறவு வெறுமனே ஆள்வோரை புகழ்கின்ற உறவாக அல்லது அரசியல் மேடைகளில் பாத்திஹாவையும், துஆவையும் ஓதுவதற்கு மாத்திரம் ஆலிம்களை நாடி வருகின்ற உறவாக அன்றி, சமூக நலன் காக்கின்ற விடயங்களில் பரஸ்பரம் கலந்தாலோசனை செய்து கொள்கின்ற, அரசியல்வாதிகள் தவறுவிடுகின்ற போது அழகாகச் சுட்டிக் காட்டித் திருத்துகின்ற உறவாக அமைய வேண்டும். ஆனால் இத்தகைய உறவு நிலையை மிக அரிதாகவே காண முடிகின்றது. ஆட்சியாளர்களை அவர்களின் போக்கில் விட்டு விட்டு, நல்லவர்கள் தாம் மாத்திரம் நன்மை செய்து கொண்டிருப்பது நமது சமூகத்தின் விடிவுக்கு வழியாக அமைய மாட்டாது. மாற்றமாக அது எம் அனைவரினதும் அழிவுக்குக் காரணமாகவே அமையும். இதனை விளங்கிக் கொள்ள நபிகளார் சொன்ன பின்வரும் உதாரணம் மிகப் பொருத்தமானதாகும். 
 

அல்லாஹ்வின் சட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்குமான உதாரணம் ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ் தளத்திலே இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அதைக் கொண்டு வர அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் நாம் தண்ணீர் பெற நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம் நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் மற்ற அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்'. (ஸஹீஹூல் புகாரி). 

ஆம், கப்பலின் அடித்தளத்திலிருந்தவர்களைப் போன்று, இன்று உலமாக்களையும், இஸ்லாமி அமைப்புக்களையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல் அரசியல்வாதிகள் தமக்குரிய வழிகாட்டலை தாமே பெற்றுக் கொள்ள முயல்கின்றனர். அவர்களை வழிப்படுத்தாமல் உலமாக்களும், இஸ்லாமிய அமைப்புக்களும் வெறும் பார்வையாளர்களாய் மாத்திரம் இருப்பார்களெனில் முழு சமூகத்தின் அழிவும் நிச்சயம் என்பது திண்ணம். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்). எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் நரக நெருப்புக்குக்குப் பயந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெற்றதன் பின்பு முஸ்லிம் சமூகத்தின் உலக மற்றும் மறுமை நலன்களை பேணாதிருந்தால் சுவனத்தின் வாடையைக் கூட தம்மால் சுகிக்க முடியாது போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சமூகத்தின் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற, அரசியல்வாதிகளை நல்வழிப்படுத்துகின்ற பெரு முயற்சியையும் எமது தாஈக்களும் தஃவா நிறுவனங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

~ அஷ்ஷெய்க் S. H. இஸ்மத் அலி (நளீமி) M. A
. ~

0 comments:

Post a Comment