Sunday, August 25, 2013



வாய்த் திறந்து 
மழலைப் பேசத் தொடங்கியது போதே
உன் நாமத்தை எனக்குச் 
சொல்லித்தந்தனர்.
கூடவே உன்னைப் பற்றிய 
அச்சத்தையும் ஊட்டியே
வளர்த்தனர் - ஐந்து
வயதில் உன்னைத் தேடி
பள்ளி சென்ற எனக்கு
தடித்த பிரம்பால் அவர்கள்
உன்னை அறிமுகப்படுத்தினர்.


அச்சத்தோடு நான் அலிபு... பா...
கற்று - எழுத்துக் கூட்டி 
உன் வசனம் படிக்க மூன்று வருஷமாச்சு.


ஓதக் கற்ற எனக்கு
நீ பேசும் பாஷை தெரிந்திருக்கவில்லை.
பொருள் புரிந்து பாத்திஹா ஓத
தசாப்தமொன்று கடந்தது...


உன்னோடு பேசும் 
வேட்கையோடே விழித்திருந்துப்
படித்தேன் - நான் விழித்துப் படித்த
அந்த இரவுகள் நீளமானவை.
அதன் முடிவில் வந்த விடியலில்
என் வாழ்வும் பிரகாசமானது.


உன் வரிகள் இனிமையானவை - 
மென்மையாய் சலசலத்தோடும்
நதியின் ஓசையை விட அவற்றையே
நான் அதிகம் ரசிக்கிறேன்.
சோகமான பொழுதுகளில்
அவையே எனக்கு ஆறுதலாகின்றன.


உன் வரிகள் மகத்துவமானவை - 
என்னை மனிதனாக மாற்றியவை.
இருட்டில் நடந்த
எனக்கு அவைதான் விளக்காயின.


சத்தியத்தைத் தேடி 
மலைகளில் திரிபவர்களே,

தத்துவங்களில் சத்தியம்
தேடி அலுத்துப்போனவர்களே,

அசத்தியத்தை சத்தியமாய்
எடுத்துக் கொண்டவர்களே,

சத்தியத்தை அடியோடு
மறந்து போனவர்களே!!!

கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்
படைப்பாளன் உங்களோடு
பேசுகின்றான் - அவன் பேசும்
பாஷையைப் புரிந்து கொள்ளுங்கள்.



மூலம் : பனி விழும் பொழுது

0 comments:

Post a Comment