Wednesday, October 29, 2014


நன்மைகள் நிறைந்த ஒரு மாதம் எம்மை நோக்கி வந்து விட்டது. துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப 10 நாட்களும் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் பெறுமதியானவை. சூறா பஜ்ரின் ஆரம்ப வசனங்கள் இதனை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்தஆலா குறிப்பிடுகின்றான் 'அதிகாலைப் பொழுது மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீது சத்தியமாக! இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக' இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10 இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப 10 நாட்கள் என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனைய நாட்களை விட இந்த (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாட்களில் செய்யப்படும் அமல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவை. அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவா? அதற்கு நபியவர்கள் கூறினார்கள் ஆம். அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விட. ஆனால் ஒருவர் தனது உயிர் பொருளுடன் அல்லாஹ்வின் பாதையில் சென்று ஷஹீதாக்கப்படுவதை விட.

இக்கருத்தை பல ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. இரவுகளில் லைலதுல் கத்ர் இரவு சிறப்புப் பெறுவதைப் போன்று ஒற்றை நாட்களில் அரபா நாள் விஷேடமானதைப் போன்று நாட்களில் துல்ஹஜ் ஆரம்ப 10 நாட்கள் சிறப்பானது என்பதை அறிஞர்கள் விளங்கப்படுத்துகிறார்கள்.

பொதுவாக இந்த நாட்களில் அனைத்துவகையான அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமாக இருப்பதனால் நாங்கள் தாராளமாக அமல்களை அதிகமாகச் செய்ய முடியும். தொழுகையை உரிய நேரத்திற்கு தொழுவது, சுன்னத்தான ஏனைய தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், அவ்ராதுகள், ஸதகா, இனபந்துத் தொடர்புகள், தஃவா செயற்பாடுகள் இவ்வாறு அமல்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

எனவே, இந்த நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்தி உச்ச பயனை அடைவதற்கு அல்லாஹ்தஆலா எம்மனைவருக்கும் உள, உடல் ஆரோக்கியத்தை தருவானாக.


அஷ்ஷெய்க் ஆசாத்
துணைத் தலைவர்,
ஜமாஅதுஸ் ஸலாமா

0 comments:

Post a Comment