Wednesday, October 29, 2014


சவூதியில் அறபா நாள் ஒன்றாக இருக்கும் போது வேறு இடங்களில் எப்படி வேறு ஒரு நாளாக இருக்க முடியும் என்ற கேள்வி துல்ஹஜ் மாதத்தின் மில்லியன் டொலர் கேள்வியாகும். வருடா வருடம் இந்தக் கேள்வி பெரும்பாலானவர்களது உள்ளத்தில் வந்து போவது என்னவோ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.

சவூதிப் பிறை பற்றியெல்லாம் பேசி எந்தப் பிரயோசனமுமில்லை என்பதால் இது தொடர்பான மார்க்கத்தின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம் என்று இதனைப் பதிவிடுகின்றேன்.

மார்க்கத்தில் தர்க்க ரீதியாக அறிவைப் பயன்படுத்த வேண்டிய, தர்க்க ரீதியாக கேள்வி கேட்க வேண்டிய பகுதி ஒன்றும் கேள்வி கேட்காமல் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டிய பகுதி என்று ஒன்றும் இருக்கின்றன.

இந்த இரண்டையும் குழப்பிக் கொள்வதனாலேயே பிரச்சினையே இல்லாத பல விடயங்கள் விவாதப் பொருளாக்கப்பட்டு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.

பல விடயங்களில் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து வினாத் தொடுத்து தர்க்க ரீதியாக அணுகி தெளிவைப் பெற்று ஏற்று அங்கீகரிக்க வேண்டிய நிலையை மார்க்கத்தில் வைத்திருக்கின்ற அல்லாஹ், அந்த அறிவை மனிதனுக்கு வழங்கிய தான் வகுத்த சில சட்டங்களை, ஏற்பாடுகளை அறிவுக்கு அப்பால் ஏற்று சந்தேகங்களின்றி அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் மார்க்கத்தில் முக்கியமான ஓர் அடிப்படையாக வைத்திருக்கின்றான்.

அனைத்தையுமே தர்க்க ரீதியாக அணுகித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டால் மார்க்கத்தில் ஈமான் (நம்பிக்கை) என்ற ஒன்றுக்கு தேவையில்லாமல் போயிருக்கும். இந்த சாதாரண யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பலர் அனைத்திலும் அறிவைப் புகுத்தி தர்க்கித்து மார்க்கத்தின் வரம்புகளைத் தாண்டி வெளியேறும் நிலை ஏற்பட்டு வருவதை உலகம் அன்று தொடக்கம் இன்று வரை கண்டு வருகிறது.

இந்த அடிப்படையில் இபாதத் என்று வருகின்ற போது அதில் குறிப்பிட்ட ஓர் இபாதத் குறிப்பிட்ட ஒரு முறையில் நிறைவேற்றப்படுவது தொடர்பாக யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. உதாரணமாக சுபஹுக்கு ஏன் இரண்டு ரக்அத்துக்கள்? ழுஹருக்கு ஏன் நான்கு ரக்அத்துக்கள்? என்று யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. யாராவது அப்படி ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் 'அது அப்படித்தான்' என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ஏனெனில் இது மனித விளக்கத்துக்கு அப்பால் பட்ட ஒரு விடயமாகும். அது ஏன் அப்படி என்பதை படைத்தவன் மட்டும்தான் அறிவான்.

அதே போன்றுதான் ஹஜ் என்ற இபாதத்திலும் பல கிரியைகளை அல்லாஹுத் தஆலா ஏற்படுத்தியுள்ளான். ஹஜ் என்ற கடமை யாருக்கென்றால் யாரெல்லாம் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் குறிப்பிட்ட ஒரு வருடத்தின் ஹஜ்ஜுடைய மாதங்களில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமுக்கு புனிதப் பயணம் செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான்.

தொழுகையில் அல்லாஹுத் தஆலா யாருக்கும் விதிவிலக்களிக்கவில்லை. அனைவரும் தொழுதுதான் ஆக வேண்டும். எனவே தொழுகை கடமையில்லாதவர்களுக்கு என்ன செய்யலாம் என்ற ஒரு விடயம் மார்க்கத்திலில்லை.

நோன்பு அனைவருக்கும் கடமையாயிருப்பினும் சிலருக்கு நோய் மற்றும் முதுமை காரணமாக அதில் விதிவிலக்களிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நோன்பு நோற்க முடியாத அத்ததைகயவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை அல்லாஹுத் தஆலா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான.

ஸக்காத் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினருக்கே கடமையாகும். ஸக்காத் கொடுக்கும் தரத்தை அடையாதவர்களுக்கென்று விஷேட ஏற்பாடுகள் எதுவும் மார்க்கத்தில் கிடையாது. ஆனால் தர்மம் செய்வதை யாருக்கும் செய்யலாம் என்பது பொதுவான விடயமாக உள்ளது.

ஆனால் ஹஜ்ஜில் மட்டும் கடமையான ஒரு சாரார் மக்காவுக்கு சென்று அதனை நிறைவேற்றும் போது அதற்கான பதிலீடொன்றை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹுத் தஆலா இபாதத்தாக்கி வைத்திருக்கின்றான். அதுதான் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாதவர்களும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களின் சிறப்பில் பங்கெடுக்கலாம், பிறை பத்து முதல் பதின்மூன்று வரை உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றலாம், பத்தாம் நாள் பெருநாள் கொண்டாடலாம், தக்பீர் சொல்லலாம்... என்பன போன்ற விடயங்களைக் கூறலாம்.

ஆனால் ஹஜ் யாருக்கு என்றால் மக்காவுக்கு சென்றவர்களுக்கு மட்டும்தான். அந்த ஹஜ்ஜின் கிரியைகளுள் ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகளுக்கும் ஹஜ்ஜுக்குச் செல்லாத ஏனையவர்களுக்கும் பொதுவான ஒரே விடயம் உழ்ஹிய்யா மட்டும்தான். இங்கு நாம் அங்கு அவர்கள் செய்வது போன்று இஹ்ராம் அணிவதோ, கல்லெறிவதோ, தலையை மழிப்பதோ எதுவும் செய்வது கிடையாது.

அறபா என்பது ஹஜ்ஜின் அடிப்படைகளுள் ஒன்று. அறபா மைதானத்தில் துல்ஹஜ் பிறை ஒன்பதாம் தினத்தன்று தரிக்காத ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றியவராகக் கருதப்பட மாட்டார். அன்றைய தினம் யாருக்கு அறபாவுடைய தினமென்றால் யாரெல்லாம் ஹஜ்ஜுக்குச் சென்றார்களோ அவர்களுக்கு மட்டும்தான். ஏனையவர்களுக்கு அது வெறும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் மட்டுமே. துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதனாலும் ஒன்பதாம் நாள் அதிலும் விஷேடமான நாள் என்பதாலும் அத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஹஜ்ஜுக்காக அறபாவில் தரித்திருப்பவர்களுக்கு அன்றைய தினம் நோன்பு நோற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி தொழுகை என்ற இபாதத்துடன் நேரம் சம்பந்தப்படுகின்றதோ அதே போன்று இந்த இபாதத்துடன் பிறை சம்பந்தப்படுகின்றது. நாம் எமது தொழுகை நேரத்தை உலகில் வேறு எங்குள்ள நேரத்துடனும் ஒப்பிடுவதில்லை. நாம் இலங்கையில் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருக்கும் போது அமெரிக்காவில் சில நேரம் மஃரிப் தொழுது கொண்டிருப்பார்கள், இன்னுமொரு நாட்டில் லுஹர் தொழுது கொண்டிருப்பார்கள், வேறெங்கோ நடு இரவில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இதனை யாரும் ஒரு பிரச்சினையாக்கிக் கொள்வதில்லை. இதனை ஒரு பிரச்சினையாக்கி கேள்வி கேட்டால் நம்மை மார்க்கம் தெரியாதவன் மட்டுமல்ல விவரமும் தெரியாதவன் என்று அனைவரும் எண்ணி விடுவார்கள் என்பதில் அனைவருக்கும் போதுமான தெளிவிருக்கின்றது.

தொழுகை நேரங்கள் சூரியனது ஓட்டத்தை வைத்தே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. சூரியனைப் படைத்த அதே இறைவன்தான் சந்திரனையும் படைத்திருக்கின்றான். அந்த சந்திரனது ஓட்டம் தான் மாதங்களின் முதல் நாட்களையும் மொத்த நாட்களையும் தீர்மானிக்கும் கருவியாக எமக்கு படைத்தவனால் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கின்றது. சூரியக் கணக்கிலும் சந்திரக் கணக்கிலும் உள்ள முக்கியமான ஒற்றுமை யாதெனில் அவை இரண்டும் இடத்துக்கிடம் மாறுபடும் என்பதாகும்.

அதனையேதான் நபியவர்களும் பிறை பார்க்கும் விடயத்தில் சொல்லியிருக்கின்றார்கள். நோன்பை நோற்பதாக இருந்தாலும் விடுவதாக இருந்தாலும் பிறை பார்த்து அதனைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்பது மார்க்கத்தின் வழிகாட்டலாக இருக்கின்றது.

ஹஜ்ஜுக்கு அறபா கடமை என்பது போன்று ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அறபா கடமை கிடையாது. ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் அறபா தினத்தில் நோன்பு நோற்பது கிடையாது, ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அறபாவில் தரிப்பது கிடையாது. எனவே சவூதி என்ற பிரதேசத்தின் சூரிய நேர வித்தியாசத்துக்கேற்ப அங்கு எப்படி தொழுகை நேரம் நமது நேரத்தை விட வித்தியாசப்படுகின்றதோ அதே போன்று அந்தப் பிரதேசத்தின் சந்திர நேர வித்தியாசத்துக்கேற்ப இங்கும் அங்கும் மாதத்தின் முதல் நாளும் மொத்த நாட்களும் வித்தியாசப்படுகின்றன.

யார் யார் எந்தெந்தப் பிரதேசங்களில் இருக்கின்றார்களோ அவர்கள் அந்தந்தப் பிரதேசத்தின் தொழுகை நேரங்களைப் பின்பற்றித் தொழுது கொள்வதைப் போல யார் யார் எந்தெந்தப் பிரதேசங்களில் இருக்கின்றார்களோ அவரவர் அவ்வப் பிரதேசத்தின் பிறைக் கணக்கைப் பின்பற்றிக் கொள்ளட்டும்.

இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதெல்லாம், ஹஜ் ஓர் இபாதத், பெருநாள் ஓர் இபாதத், அறபா ஓர் இபாதத், துல்ஹஜ் பிறை ஒன்பதில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நோன்பு நோற்பது ஓர் இபாதத், இந்தக் கடமைகளையும் வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக வேண்டி பிறை பார்ப்பது ஓர் இபாதத், அதற்காக ஒன்று கூடுவது இபாதத், அதனைத் தீர்மானிப்பது இபாதத், அதனை அறிவிப்பது இபாதத்.

இவை அத்தனையும் இபாதத்கள், வணக்க வழிபாடுகள். இவற்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் செய்யுமாறு கூறியிருக்கின்றார்கள். அவற்றை அவ்வாறே செய்வது எம்மீது கடமையாகும். அது ஏன் அப்படி? எனது அறிவுக்கு அது படவில்லையே!... என்னதான் இருந்தாலும் அங்கு அறபாவாக இருக்கும் போது இங்கு எப்படி இல்லாமல் இருக்க முடியும்? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதுதான். ''உங்கள் அறிவுக்கு அது படாமல் இருப்பதால் அது மார்க்கமில்லை என்று ஆகி விடாது, மாற்றமாக உங்களுக்கு இந்த அறிவைத் தந்த அல்லாஹுத் தஆலா தனது எல்லையில்லாத அறிவின் மூலமாக ஏற்படுத்திய நியதிகள் நிச்சயம் கச்சிதமானவை, மிகச் சிறந்தவை, மனித வாழ்வுக்கு ஏற்றவை என்பதில் எவ்விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.''

இங்கு இக்கடமையை செய்வதில் தலைவர்களுக்கு ஒரு பங்கிருக்கின்றது, மக்களுக்கு ஒரு பங்கிருக்கின்றது. தலைவர்களது பங்கு யாதெனில் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்து மிகுந்த பேணுதலுடன் இது தொடர்பான முடிவுகளை எடுப்பதாகும். சவூதி அரசாங்கம் சவூதி என்ற பிரதேச மக்களுக்கான தலைமைத்துவமாகும். மக்கா அந்த நாட்டின் எல்லைக்குள் இருப்பதால் அங்கே அவர்களது முடிவுதான் செல்லுபடியாகும். அதைவிட்டு விட்டு ஒவ்வொரு நாட்டவரும் அவரவரது நாட்டின் பிறைக்கேற்ப அங்கு ஹஜ் செய்ய நினைத்தால் அது அசிங்கமாக இருக்கும்.

அதே போன்றுதான் அதன் மறுபக்கமும். நமது நாட்டுக்கு அதற்கென்று சில பொறுப்புதாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் அது தொடர்பாக முடிவெடுக்கின்றார்கள். நமது நாட்டின் முடிவும் சவூதியின் முடிவும் ஏன் வேறுபடுகின்றதென்றால் இரண்டு நாடுகளினதும் வானிலை வேறுபடுகின்றது என்பதனால்தான்.

இந்த முடிவை எடுக்கும் விடயத்தில் தலைமைகள் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அதற்குரிய பொறுப்புதாரிகள் அவர்கள் மாத்திரமே! அது அரசாங்கமாக இருக்கலாம், ஓர் அமைப்பாக இருக்கலாம். அப்போது முழு சமூகமும் நோன்பு நோற்க வேண்டிய தினத்திலல்லாமல் வேறொரு தினத்தில் நோன்பு நோற்றதற்கான பாவத்தையும் அவர்கள் சுமந்து கொள்வார்கள். ஆனால் பல போது தவறு நடந்ததோ இல்லையோ பொறுப்புதாரிகளின் அந்தரங்கத்தையெல்லாம் தோண்டியெடுத்து நடுச்சந்தியில் வைத்து அனைவரும் சேர்ந்து சப்பித் துப்பி அவர்களது பாவங்களையெல்லாம் கழுவி அவர்களது நன்மைத் தட்டைக் கனக்கச் செய்து தமது அழுக்கு மூட்டைகளை நிரப்பிக் கொள்கின்ற வேலையை பலரும் கனகச்சிதமாகச் செய்து வருகின்றனர்.

எனவே இது ஓர் இபாதத், நாம் பிறை கண்ட அடிப்படையில் நாம் நாட்களைக் கணக்கிட்டு நோன்பு நோற்போம், பெருநாள் கொண்டாடுவோம். அங்கு அவர்களது கணக்கின் படி அவர்கள் அறபாவில் தரிக்கட்டும். நம் அனைவரது கணக்கையும் நிச்சயமாக நாளை மறுமையில் அல்லாஹ் தீர்த்து வைப்பான். அது வரையில் ஏன் இது இப்படி என்று கேட்பவர்களுக்கான பதில் ''ஆம் அது அப்படித்தான்'' என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

~ அபூ உஸ்மான் ~

0 comments:

Post a Comment