Friday, October 16, 2020


 

Sheikh Edebali (1206 - 1326) அவர்கள் உஸ்மானிய சாம்ராஜியத்தின் ஸ்தாபகரான உஸ்மான் காஸி அவர்களுக்கு செய்த உபதேசங்கள். இந்த உபதேசங்கள் உஸ்மானிய சாம்ராஜியத்தின் எழுதப்படாத சாசனமாகத் திகழ்ந்தது.
 
ஒரு சிற்றரசனாகிவிட்டாய் மகனே!
 
இதன் பிறகு ஆவேசமும் ஆக்ரோஷமும் எமக்குரியது,
ஆதரிப்பதும் அரவணைப்பதும் உனக்குரியது.
விமர்சனம் எமக்குரியது,
உள்ளங்களை வெல்வது உனக்குரியது.
குற்றம் பிடிப்பது எமக்குரியது,
தாங்கிக்கொள்வது உனக்குரியது.
இயலாமையும் தப்புக் கணக்கும் எமக்குரியது,
சீராக்கி சிறப்பிப்பது உனக்குரியது.
போட்டி பொறாமைகளும் சண்டை சச்சரவுகளும் எமக்குரியது,
நீதி நியாயத்தை நிலைநாட்டுவது உனக்குரியது.
சந்தேகப் பார்வையும் குறை தேடுவதும் எமக்குரியது,
மன்னித்தருள்வது உனக்குரியது.
பிரிவினை எமக்குரியது,
இணைப்பதும் ஒட்டுவதும் உனக்குரியது.
பொடுபோக்கு எமக்குரியது,
எச்சரிப்பதும் ஊக்குவிப்பதும் வார்த்தெடுப்பதும் உனக்குரியது.
 
மகனே!
அதிகாலை நேரம் பிறந்து அந்தி சாயும் நேரம் மரணிக்கிறான் மனிதன்.
மறந்துவிடாதே! உலகம் நீ நினைப்பதைப் போன்று பிரமாண்டமானதல்ல. அதைப் பெரிதாகக் காட்டுவது எங்களுடைய சிறுமையாகும்.
 
தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், தலைநிமிர்ந்து மரணிக்க வேண்டும். இந்தப் பாதையில் பேராசையென்பது முள் வேலியாகும். சுய நலமும் பெருமையும் தடைக் கற்களாகும். 
 
தவறியும் “நான்” என்பதில் சிக்கி “நான்” என்பதில் மூழ்கிவிடாதே. ஏகமும் தனிமையும் இறைவனுக்கு (الله) மாத்திரம் உரியதாகும். 
 
தனிக்காட்டு முடிவுகள் உதவிக்கு நிற்காது. அகோரமான உலகின் தாங்க முடியாத சுமையைத் தனியாக உன்னால் சுமக்க முடியாது மகனே. காரியங்கள் அனைத்தையும் தேர்ந்தவர்களிடம் கலந்தாலோசித்துக்கொள். கலந்தாலோசிக்கும் வரை முன்னேறுவாய். இல்லாவிட்டால் தடுக்கி வீழ்வாய்.
 
மகனே!
பலமும் புத்திக் கூர்மையும் உடையவனாக இருக்கின்றாய். உன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கின்றது. ஆனால் இவற்றை எங்கு, எவ்வாறு பிரயோகிப்பது என்பதை அறியாவிட்டால் அதிகாலைத் தென்றலும் உன்னை அள்ளிச் சென்றுவிடும்; ஒரு மூச்சுக் காற்றும் உன்னுடைய உலகத்தைக் கவிழ்த்துப்போடும்; ஒரு கண்ணீர்த் துளியும் உன்னுடைய உலகத்தை மூழ்கடித்துவிடும்; ஓர் அற்ப எறும்பும் உன்னை வீழ்த்திவிடும்.
 
புத்தி என்பது திறவுகோலாகும். அதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அசலான விடயம் அந்தத் திறவுகோலால் திறக்கப்படுகின்ற கதவுகளாகும். கதவுகளுக்குப் பின்னால்தான் பொக்கிஷங்கள் இருக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால்தான் இரகசியங்கள் இருக்கின்றன. அந்த இரகசியங்களில் சுபசோபனங்கள் இருக்கின்றன. அவையே உன்னை நித்தியத்துக்குப் பாத்திரமாக்கின்ற சூட்சுமங்களாகும். எனவே புத்தியைப் பிரயோகித்து உலகத்திலிருக்கும் போதே சுவனத்துக் கதவுகளை திறந்துகொள் மகனே!
 
சீற்றமும் சுய நலமும் கூட்டுச் சேர்ந்தால் புத்தியை வீழ்த்திவிடும். என்றும் எப்போதும் பொறுமையையும் சுய கட்டுப்பாட்டையும் பேணி நிலைகுழையாமல் நில். இல்லாவிட்டால் உன்னுடைய முடிவுகளுக்கு நீயே எஜமானனாக இருக்கமாட்டாய்.
 
பெருந்தன்மை எப்போதும் உன்னுடையதாக இருக்கட்டும். புறப்பட்டுள்ள பாதையையும் தோலிலுள்ள சுமையையும் நன்றாக அறிந்துகொள். எல்லாக் காரியங்களுக்கும் முன்னர், அவசியமான அனைத்தையும் உரிய நேரத்தில் செய்துவிடு.
 
பொறுமையாக இருப்பதற்குக் கற்றுக்கொள். பொறுமையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை மகனே!
நேரம் வருவதற்கு முன் பூக்கள் மலர்வதில்லை.
மகத்தான ஒரு பொறுப்பும் கனமான ஒரு சுமையும் உன் தோல் மீதிருக்கின்றது. உழைப்புக்கு முன் வரிசையிலும் கூலிக்குப் பின் வரிசையிலும் இருப்பதை வழமையாக்கிக்கொள். பணிகளுள் மிகக் கடினமானதை நீயே சுமந்துகொள். ஏனெனில் கடினமான பணிகள் படைத்தவன் அடியானுக்குச் செய்கின்ற அருள்களாகும்.
 
இந்த உலகில் இறை நம்பிக்கையைத் (إيمان) தொலைத்துவிட்டால் பச்சையாகவும் பசுமையாகவும் இருக்கும் போதே காய்ந்து வறண்ட பாலைவனமாக மாறிவிடுவாய்.
 
தாய்க்கும் முன்னோருக்கும் மரியாதை செலுத்து. ஆசீர்வாதம் (بركاته) என்பது பெரியவர்களுடனேயே இருக்கின்றது.
 
மகனே!
  • தெளிவாகப் பேசு.
  • வசைகள் அனைத்தையும் நீயாக உன் தலையில் போட்டுக்கொள்ளாதே.
  • அறிந்தவை அனைத்தையும் அறிந்துவிட்டதாகக் கொள்ளாதே.
  • கூறிய வார்த்தைகளை மறந்துவிடாதே.
  • வார்த்தைகளை வார்த்தைகளாக இருக்கட்டும் என்பதற்காகக் கூறிவிடாதே.
  • நாங்கள் வெறுப்பையும் குரோதத்தையும் வளர்ப்பதற்காக வந்தவர்களல்லர். மாறாக அன்பின், ஆதரவின் மகிமையை மீண்டும் இந்த உலகில் ஓங்கச் செய்வதற்காகப் புறப்பட்டவர்கள்.
  • இந்தப் பாதையில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை.
  • அன்பின் பாதையில் இரகசியங்களோ சூழ்ச்சிகளோ அவசியமில்லை. ஆனால் தங்கத்தின் பெறுமதியைப் பொற்கொல்லனே அறிவான்.
  • எனவே முன்னாலுள்ளவனின் தகுதிக்கேற்ப வார்த்தைகளை அளந்து பேசு.
  • அறிந்தவைகள் அனைத்தையும் தகுதியற்றவர்களுக்கு முன்னால் கால் தூசாக மாற்றிவிடாதே!
  • இறைத் தூதர் யூனுஸைப் போன்றிரு! உள்ளம் அன்பின் பக்கமும் மனசாட்சி உண்மையின் பக்கமும் இருக்கட்டும்.
  • ஒரு முறை வாக்களித்துவிட்டாயெனில், அது உன்னுடைய மானத்தைப் போன்றதாகும். மானத்தைப் பாதுகாத்துக்கொள்!
 
உண்மைக்கான போராட்டத்தில் அஞ்சாதே! அறிந்துகொள், மிகச் சிறந்த வீரனைப் பைத்தியம் என்றே அழைப்பார்கள்.
 
அனைத்தையும் போல் காதலிலும் மத்திமமானதே சிறந்ததாகும் மகனே! காதலை முழுமையாக உள்ளத்திடம் கையளித்துவிடாதே. காதலிப்பதையும் தகுதிக்கு அதிகம் காதலிக்காதே. மிகவும் அகோரமான சோதனை காதலுடனான சோதனையாகும். “மிகத் திடமான வீரனாகத்தான் இருந்தாலும் காதலுக்கு முன்னால் பஞ்சாகிவிடுவான்” என்ற முன்னோரின் வார்த்தை எப்போதும் உனது நினைவில் நிற்கட்டும்.
 
இப்படிப்பட்ட சோதனைகள் வராதிருப்பதற்கும் எதிர்கால சந்ததிகள் தலை குனியாதிருப்பதற்கும் நடு நிசியின் அமைதியிலும் அதிகாலை விடியலிலும் பிரார்த்தனைகளில் (دعاء) சங்கமித்துவிடு மகனே! 
 
மகத்தான பொறுப்புகளையும் எதிர்கால இலக்குகளையும் சுமந்திருக்கின்றாய் என்பதை மறந்துவிடாதே.
மனசாட்சியுள்ள மனிதன் வாழ்வை வீணாகக் கடத்தமாட்டான்; ஆத்மாவை மலிவாக விற்கமாட்டான்; ஒழுக்கம் என்ற கிரீடத்தைத் தலையிலிருந்து எறியமாட்டான்.
 
மனதால் முதிர்ந்த மனிதனின் முகம் எப்போதும் தாழ்ந்திருக்கும். உள்ளம் எப்போதும் வானலாவ விசாலமாக நிமிர்ந்து நிற்கும். 
 
அவன் உண்மைக்கு என்று வந்தால் சண்டைக்கு நிற்பதை அறிவான். சண்டை என்பது வெறுமனே முஷ்டியால் மாத்திரமல்ல, அறிவாலும் நெஞ்சுரத்தாலும் என்பதையும் அறிந்திருப்பான்.
 
நலவுக்குக் கெடுதி துஷ்டன் கணக்கு, நலவுக்கு நலவு மாந்தர் கணக்கு, கெடுதிக்கும் நலவு சான்றோர் கணக்காகும், அறிந்துகொள் மகனே!
 
மகனே!
மூன்று நபர்களுக்காகக் கவலைப்படு.
  • அறியாமைகளுக்கு (جاهل) மத்தியிலுள்ள அறிஞர் (علم)...
  • செல்வச் செழிப்போடு வாழும் போது வறுமையில் வீழ்ந்தவன்...
  • அங்கீகாரத்தோடு இருக்கும் போது அங்கீகாரத்தை இழந்தவன்...
 
உஸ்மான்!
இந்த வார்த்தை எப்போதும் உனது மனதில் இருக்கட்டும்: மக்களை வாழவை, தேசம் அதுவாக வாழும்...
  • நீ எம்முடைய கனவாக வந்துள்ளாய்.
  • நீ எம்முடைய பிரார்த்தனையாக அவதரித்துள்ளாய்.
  • நீயே எம்முடைய உளக்கிடக்கையாகவும் வேட்கையாகவும் இருக்கின்றாய்.
எப்போதும் உன்னுடைய தலை நிமிர்ந்ததாகவும் உள்ளம் விசாலமானதாகவும் இருக்கட்டும்.
 
மகனே!
குதிரையைச் சிறந்ததாகத் தெரிவுசெய், காஃப் மலைகள் உனக்கு நெருக்கமாகட்டும்... நித்தியம் வரை உனது பாதை திறந்திருக்கட்டும்...
 
மகனே!
உன்னுடைய பாதை நீளமானது, பணிகள் கடுமையானது, சுமைகளோ கனமானவையாகும். இறைவன் எப்போதும் உனக்கு உதவியாக இருப்பானாக.
 
இறைத் தூதர் யூனுஸைப் போன்று சண்டையில் நாட்டமில்லாமல், எதிரியாயினும் இழிவுபடுத்தாமல், அன்போடும் மரியாதையோடும் சகிப்புத் தன்மையோடும், படைப்புகளைப் படைத்தவனின் பொருட்டுக்காக நேசிப்போம். நாங்கள் வியர்வை சிந்துகின்ற காலமெல்லாம் எமது தேசம் எழுந்து நிற்கும்.
 
--
மொழிபெயர்ப்பு: Rizam Al Hakeem

 

 

 

 

 

 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment