Tuesday, December 17, 2013

குறிப்பாக, நவீன அறிவியலோடு கிறிஸ்தவம் பலமாக மோதியது. அந்த மோதலில் கலிலியோ கலிலி, கொப்பனிகஸ் போன்ற பெரும் விஞ்ஞானிகள் பலியானார்கள். எனினும், அந்த மோதலின் இறுதியில் அறிவியல் வென்று மதம் தோற்றுப்போனது. அதன் விளைவாக, கிறிஸ்தவ ஐரோப்பா தனது மதத்தை தேவாலயங்களுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டு நவீன அறிவியலின் கையில் மனித வாழ்க்கையை ஒப்படைத்து விட்டது.

அதனைத் தொடர்ந்து நவீன அறிவியல் மனித வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் வடிவமைத்தது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், ஆண் பெண் உறவுகள், அவற்றுக்கான புதிய வரையறைகள், திருமணம் இல்லாத குடும்ப வாழ்க்கை, முதியோர்களுக்கு மடம், குழந்தைகளுக்கு Day Care Center, தந்தை தெரியாத குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்த்து, ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம், பெற்றார், பிள்ளைகளைக் கண்டிப்பதும் கட்டுப்படுத்துவதும் தடை...

இவ்வாறு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்கி குடும்பம், சமூகவியல், கலை, கலாசாரம், பொருளியல், அரசியல் என எதையும் விட்டு வைக்காமல் நவீன அறிவியல் அனைத்தையும் வடிவமைத்துள்ளது. இந்த வடிமைப்பில் நல்லவையும் இருந்தன. கெட்டவைகளும் இருந்தன. மதங்களோடு முரண்படாதவையும் இருந்தன. மதங்களின் அத்திவாரத்தையே தகர்த்து விடுகின்றவையும் இருந்தன. மதங்களை வெறும் ஓர் ஆன்மிக சுகத்திற்காக தேவாலயங்களின் சுவர்களுக்குள் மட்டுப்படுத்தி வைத்துவிட்டு, அறிவியல் மனித வாழ்வு முழுவதையும் தனக்கேயுரிய போக்கில் இவ்வாறு வடிமைத்தது.

இந்த முயற்சியில் அறிவியல் செய்த பெரும் தவறுதான் இறைவனையும் ஆன்மாவையும் மனித வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தியதாகும். அதாவது, மதத்தை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வெறும் உலக நலன்களை மட்டுமே அடிப்ப டையாகக் கொண்ட ஒரு சடமயமான வாழ்க்கை நாகரிகத்தை மேற்குலகம் கட்டியெழுப்பியது. இந்த வாழ்க்கை நாகரிகத்தை அவர்கள் ஐரோப்பாவோடு மட்டுப்படுத்தவில்லை. உலகின் பெரும் பகுதியை தங்களது காலனித்துவ ஆட்சியின் கீழ் அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அங்கெல்லாம் அவர்கள் இந்தப் புதிய மதத்துடனேயே சென்றார்கள். அது மிகவும் கவர்ச்சியாக இருந்ததனால் அப்போது செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த மதங்கள் பல வாழ்க்கை நீரோட்டத்திலிருந்து மெல்ல மெல்ல விடைபெற்றன. இறுதியில் அம்மதங்களைப் பின்பற்றியோர் அவற்றை விட்டு விலகி உலகின் புதிய மதமான மேலைத்தேய அறிவியல் நாகரிகத்தைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.

இந்தப் புதிய மதம் உலகிற்கு ஒரு புதிய தெய்வத்தை முதலில் அறிமுகம் செய்தது. உலகில் யார் அனைத்து பலங்களையும் வளங்களையும் கொண்டிருக்கின்றார்களோ அவர்களையே ஏனையோர் பின்பற்ற வேண்டும்.
அவர்களை வணங்கி வழிபடத் தயாரில்லாதவர்கள் அயோக்கியர்கள்
அவர்கள் விரும்புபவற்றை உலகில் அமுல்படுத்தாதவர்கள் குற்றவாளிகள்
அவர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணியாதவர்கள் பயங்கரவாதிகள்
அவர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டிகள்
அவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அடிப்படைவாதிகள்
அவர்களின் நலன்களுக்கு சார்பாக வேலை செய்யாதவர்கள் தீண்டத்தகாதவர்கள்
அவர்களின் புகழ், மேன்மை, கீர்த்தி என்பவற்றுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள் தெய்வத்தின் குழந்தைகள் அவர்கள் என்ன தவறுகளைச் செய்தாலும் அந்தப் புதிய தெய்வம் அவர்களைக் கண்டுகொள்ள மாட்டாது.

இவ்வாறு நவீன உலகத்தை தம்மை வணங்கி வழிபடும் உலகமாக மாற்றியமைப்பதில் மேற்கத்தேய நாகரிகத்தின் ஸ்தாபகர்கள் வெற்றியடைந்தார்கள். அது மட்டுமல்ல, தமக்குக் கிடைத்திருக்கும் தெய்வீக அந்தஸ்த்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான பலம், வளம் என்பவற்றில் பெரும் பகுதியை தமது கைவசம் கொண்டு வருவதிலும் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
 
  • வீட்டோ அதிகாரம்
  • ஐ.நா சபை
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
  • சர்வதேச மன்னிப்பு சபை
  • சர்வதேச சட்டங்கள்
என எண்ணற்ற பலமும் வளமும் அவர்களது கைகளுக்குள் அகப்படுத்தப்பட்டன. எனினும், அந்தப் புதிய தெய்வம் இத்தகைய பலங்களாலும் வளங்களாலும் திருப்தியடையவில்லை. தமது அதிகாரப் பசிக்கும் சுரண்டல் பசிக்கும் இவை போதாது என்று ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அது உலக நாடுகளெங்கும் விஸ்தரித்தது.

இத்தகைய ஆக்கிரமிப்புப் போர்களால் தமது இமேஜ் (Image) உலகில் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, தன்னை வணங்கி வழிபடும் பக்தர்கள் தனக்கெதிராக மாறிவிடக் கூடாது என்ற கவலையும் அதற்கு இருந்தது. இந்தக் கவலையைப் போக்குவதற்கு அந்த தெய்வம் இரண்டு பிரதான உத்திகளைக் கையாண்டது.

அ. தன்னை வழிபடும் நாடுகளுக்கும் கட்சிகளுக்கும் கடன்கள், சலுகைகள், உதவிகள், மன்னிப்புகள் போன்றவற்றை வழங்கி தமது பெருந்தன்மையையும் இரட்சிக்கும் தன்மையையும் உறுதிப்படுத்தல்.

ஆ. தனது ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டும் உலகின் கண்களுக்கு தெரிவதைத் தவிர்ப்பதற்காக உலகில் இன்னும் பல போர்களை உருவாக்கி உலகின் கவனத்தை சிதறடித்தல். அதன் மூலம் பல நன்மைகள் அந்தப் புதிய தெய்வத்துக்குக் கிடைக்கிறது.

  1. போர் செய்வது தான் மட்டுமல்ல என்ற பதிவை ஏற்படுத்தல்.
  2. ஏனைய போர்களைக் காரணம் காட்டி உலக அமைதிக்காக தானும் போர் செய்ய வேண்டும் என்பதை நியாயப்படுத்தல்.
  3. போர்க்களங்களை ஆயுத சந்தைகளாக மாற்றி ஆயுத விற்பனையில் ஈடுபடல்.
  4. தனது புதிய ரக ஆயுதங்களை காலத்துக்குக் காலம் பரீட்சிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுதல்.
  5. பல்வேறு யுத்த தரப்பினரிடையே நல்லெண்ண சமாதான தூதுவராகவும் பணிபுரிதல்.

இவ்வாறு நவீன நாகரிகம் என்ற புதிய மதத்தின் கடவுளர்கள் தமது வல்லாதிக்கத்தை உலகில் திணித்து தமது கட்டுப்பாட்டுக்குள் உலக சமூகங்களையும் நாடுகளையும் வைத்துக் கொள்ளும் தந்திரோபாயங்களையும் வகுத்தார்கள். அந்தத் தந்திரோபாயங்கள், அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகள் பலதை அவர்களுக்கு ஈட்டித் தந்தன. நாடுகள் மற்றும் சமூகங்களின் தலைவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு இதனால் முடிந்தது. எனினும், சமுதாய நலனில் அக்கறையுள்ள புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவிலாளர்கள் போன்றவர்களை வெல்வதற்கு இந்தத் தந்திரோபாயங்களினால் முடியவில்லை. ஏன் பொது மக்கள் இவற்றுக்கெதிராகக் கிளர்ந்தெழுவதை புதிய மதத்தின் கடவுளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்களிடம் இயல்பாகவே காணப்படும் மனித நேயம், அன்பு, நல்ல பண்புகள், மானுட விழுமியங்கள் என்பவற்றுக்கெதிராக உலகில் யார் செயல்பட்டாலும் அவற்றை அவர்கள் எதிர்க்கத்தானே செய்வர்.

இந்த உண்மை புதிய மதத்தின் கடவுளர்களுக்கு நன்கு தெரியும். நாடுகளின் தலைவர்களை வளைத்துப் பிடித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவர்களால் வெற்றி பெற முடிந்தாலும், மக்களை வளைத்துப் பிடிப்பது இலகுவானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மக்கள் ஒன்றுசேர்ந்து விட்டால் தம்மை வணங்கி வழிபடும் தலைவர்களை தூக்கி எறிந்துவிட்டு தமது வல்லாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதை இந்தக் கடவுளர்கள் உணர்ந்தே இருந்தனர். மக்கள், விழுமியங்களை நேசிப்பவர்கள், மதங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், மனித நேயம், அன்பு என்பவற்றால் இலகுவில் ஆகர்ஷிக்கப்படுபவர்கள். அவர்கள் அநீதிகளையும் அக்கிரமங்களையும் போர்களையும் விரும்புவதில்லை. எனவே, இத்தகைய இயல்பு கொண்ட மக்களை தமக்கு அச்சுறுத்தல் இல்லாமல் வைத்துக் கொள்வது எப்படி?

நவீன நாகரிகம் என்ற புதிய மதத்தின் கடவுளர்கள் இதற்கும் தீர்வு கண்டார்கள். நான்கு பிரதான தந்திரோபாயங்களால் மக்களின் கவனத்தை சிதறடித்து அவர்களை விழுமிய வாழ்க்கையிலிருந்து ஓரம் கட்டி விடுவதே அந்தத் தீர்வாகும். அந்தத் தீர்வை அமுல்படுத்தினால் புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் கவனங்களும் திசை திரும்பிவிடும். அப்போது புதிய கடவுளர்களின் குறைகளை விமர்சிப்பதற்கு அவர்களுக்கும் நேரம் இருக்காது.

மக்களை விழுமிய வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதற்கு அவர்கள் கண்டறிந்த தந்திரோபாயங்கள் வருமாறு:
  1. வகை தொகையற்ற வரம்புகளற்ற பொழுதுபோக்குகள்.
  2. நுகர்வோர் கலாசாரமும் ஆடம்பர மோகமும்.
  3. இனவாதத்தையும் மதவாதத்தையும் பரவலாக்குதல்.
  4. சட்டங்களை சர்வதேச மயப்படுத்தல்.

இந்த நான்கு அம்சங்களும் நவீன நாகரிகம் என்ற புதிய மதத்தின் பிரதான இலட்சணங்களாகும். புதிய மதத்தின் வீச்சு இந்த நான்கு அம்சங்கள் காரணமாக பூகோளக் கிராமத்தை தன்னகப்படுத்தியுள்ளது. மனித சமூகம் சுமந்திருந்த உன்னதமான விழுமியங்கள், அந்த விழுமியங்களைக் கற்றுத்தந்த மதங்கள் அனைத்தும் புதிய மதத்தின் இந்த உத்திகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்டுள்ள புதிய மதத்தின் நான்கு இலட்சணங்களையும் உலகமயப்படுத்துவதற்கு புதிய கடவுளர்கள் மீடியா எனும் ஊடக ஆயுதத்தை அதி உச்சமாகப் பயன்படுத்துகின்றனர். நவீன உலக மீடியாக்கள் அனைத்தும் அவர்கள் கைவசம் இருப்பதனால் புதிய மதத்தை உலக மயப்படுத்தும் அவர்களது முயற்சி பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. பிரதான உலகமதங்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு மக்களை ஆக்கிரமித்துள்ள இந்த புதிய மதத்தின் விஷேட கிரியைகள் நான்கையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.


நுகர்வோர் கலாசாரமும் ஆடம்பர மோகமும்
வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதளவு மக்களை ஆட்டிப்படைக்கும் மோகமாக இது மாறியுள்ளது. மக்கள் முற்காலங்களில் தங்களது அத்தியவசியத் தேவைகளுக்காக மட்டுமே பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள். இன்றோ அது ஒரு “பெஷனாக” (Fashion) மாறி தேவைக்கு அதிகமாகவும் சிலபோது பகட்டுக்காகவும் கொள்வனவு செய்யும் கலாசாரமாக அது வளர்ந்துள்ளது. இந்தப் போதையை இன்றுள்ள ஊடகங்களும் மக்களின் தலைக்கேற்றியுள்ளன. இதனால் தேவையை விட அதிகம் தேடி தேவையை விட அதிகம் செலவு செய்வதே வாழ்வின் உன்னதமான நோக்கம் என்ற சித்தாந்தம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.

ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டு பொருள் தேடவும் செலவு செய்யவும், பகட்டு வாழ்க்கை வாழவும் இந்த மனப் பதிவுகள் அவர்களைத் தூண்டுகின்றன. இந்த இலட்சியத்தைத் தவிர வாழ்க்கையில் பிறிதொன்றுக்கு கவனம் செலுத்த முடியாதளவு புதிய மதத்தின் இந்த வாழ்க்கைத் தத்துவம் இன்றைய மக்களின் மனங்களை ஆக்கிரமித்துள்ளன. இது புதிய மதத்தின் ஸ்தாபகர்களுக்கு எவ்வளவு விருப்பமானதாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

உலகைத் தமது கட்டு பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதற்கும் புதிய மதத்தின் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் மக்கள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழாதிருப்பதற்கும் இந்த உத்தி பயனளிக்கும் என்பதில் என்ன சந்தேகம்!


வகை தொகையற்ற பொழுதுபோக்குகள்
நுகர்வோர் கலாசாரமும் ஆடம்பர மோகமும் போதாது என்று மக்களின் கவனத்தை சிதறடிக்க புதிய மதம் அறிமுகம் செய்த “தியானம்” தான் வகை தொகையற்ற... ஒழுக்க வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பொழுது போக்குகள். இன்றுள்ள பொழுதுபோக்குகளின் முன்னால் மக்கள் அமர்ந்தால் அவர்கள் தம்மை மறந்து அவற்றைத் தியானிப்பதில் மூழ்கிவிடுகின்றனர்.

கிளப்கள் (Clubs), பப்புகள் (Pubs), சினிமாக்கள் (Movies), நாடகங்கள் (Drama), கார்டூன்கள், Games, கஸினோக்கள், பந்தயங்கள், விளையாட்டுக்கள், நடனங்கள், இசைக் கச்சேரிகள், Tournaments, ஒலிம்பிக் கள், ஆபாசப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்... என இந்தப் பொழுதுபோக்குகள் நாளாந்தம் பெருகிக் கொண்டே செல்கின்றன. நுகர்வோர் கலாசாரத்தினால் பாதிக்கப்பட்டு தேவைக்கதிகமாகக் கொள்வனவு செய்வோர் அனுபவிப்பதை அனுபவித்தது போக மீதமுள்ள நேரத்தைக் கழிப்பதற்கு இந்தப் பொழு துபோக்குகள் உதவுகின்றன. இவ்வாறு ஆடம்பரம், பொழுதுபோக்கு என்பவற்றினுள் மக்கள் சிக்கிக் கொண்டால் விழுமியங்கள் அனைத்தும் உலகில் அழிந்து போவது பற்றி அவர்கள் கவலைப்படுவார்களா? இல்லை அது பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் இருக்காது. இதுவும் புதிய மதத்தின் போஷகர்கள் எதிர்பார்த்ததே.

  
இனவாதத்தையும் மதவாதத்தையும் உலகமயப்படுத்தல்
நுகர்வோர் கலாச்சாரமும் ஆடம்பர மோகமும் எல்லையற்ற பொழுதுபோக்குகளும் மக்களின் சிந்தனையைக் கலைப்பதற்கு முயன்றாலும் அவற்றால் மொத்த மக்களையும் திசை திருப்ப முடிவதில்லை. இந்தக் கவனக் கலைப்புகள் அனைத்தையும் உதாசீனம் செய்து விட்டு காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் இன்னும் பல்வேறு ஆக்க முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இறுதியில் அவர்கள் சமூகத்தின் முக்கியஸ்தர்களாகவும் பிரமுகர்களாகவும் மாறுகின்றனர். அது மட்டுமல்ல, சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் சமூக விவகாரங்களில் தாக்கம் விளைவிப்பவர்களாகவும் கூட இவர்கள் மாறிவிடுகின்றனர்.

இத்தகையவர்கள் புதிய கடவுளர்களின் நரித்தந்திரங்களுக்கு எதிராக மாறிவிடாமல் இருப்பதற்கும் இவர்களது கருத்துக்களையும் சிந்தனைகளையும் சிதறடிப்பதற்கும் இவர்களுள் பலரை தமது நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்பவர்களாக மாற்றுவதற்கும் புதிய மதம் அறிமுகம் செய்த புனிதப் போராட்டமே இனவாதமும் மதவாதமுமாகும். இனவாத, மதவாத சாக்கடைக்குள் மக்கள் இறக்கப்பட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் அங்கு ஒன்றை நிச்சயம் கண்டு கொள்ள முடியாதிருக்கும். அதாவது, ஓர் இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றோர் இனத்தை வெறுத்திருக்க மாட்டார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றொரு மதத்தைத் சார்ந்தவர்களுக்கெதிராக கலகம் செய்திருக்க மாட்டார்கள். மாறாக, சில விஷமிகளால் தூண்டப்பட்டே அவ்வாறு செய்திருப்பார்கள். தூண்டுபவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களது பின்னணியில் பல்வேறு நோக்கங்கள் இருந்திருப்பதைக் காணலாம்.

  • காலனித்துவவாதிகளின் பிரித்தாளும் கொள்கை
  • நவீன ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறைகளுக் கெதிராக உலகம் அணிசேர்ந்து விடாமல் இருக்கும் நிலையைத் தோற்றுவித்தல். உலகின் ஒவ்வொரு சாராரும் இனச் சண்டையிலும் மதச் சண்டையிலும் ஈடுபட்டிருந்தால் ஏகாதிபத்திய நோக்கம் கொண்டவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை சிரமங்களின்றி முன்னெடுத்துச் சென்று விடலாம். அது பற்றி சிந்திப்பதற்கு உலக மக்களிடம் சிரத்தை இருக்க மாட்டாது.
  • உலக சமூகங்கள் அனைத்துக்கும் மத்தியில் சுமுகநிலையைக் குலைத்து விட்டால் ஏகாதிபத்தியவாதிகள் தம்மை நல்லவர்களாகவும் சமாதானத்தின் காவலர்களாகவும் எப்போதும் பிரகடனம் செய்து கொண்டிருக்க முடியும். சமாதானத் தூது சென்று சேவை செய்யவும் சமாதானத்திற்கான நோபல் பரிசை வெல்லவும் முடியும்.

இலங்கையிலும் கூட நாம் இதன் விளைவுகளைக் கண்டோம். மூன்று தசாப்தங்கள் இலங்கை மண்ணில் இனவாதத் தீயை மூட்டியவர்கள் யாரோ அவர்கள் தான் சமாதானத் தூதுவர்களாகவும் இந்த மண்ணில் ஊடுருவி தமது ஏகாதிபத்திய நோக்கங்களை அடைந்து கொள்ள முயற்சித்தார்கள். அது முடியாமல் போனபோது மதவாதத் தீயை இப்போது மூட்டியிருக்கிறார்கள். இதனால் எமது நாடு எப்போதும் ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் சிக்கியே இருக்கும் என்பதை எமது மக்களின் பாமரத்தனத்தால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலையானதே.


சட்டங்களை சர்வதேசமயப்படுத்தல்
உலகெங்கும் இனச் சண்டைகள், மதச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் உலகின் சமாதானம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது என்று கூறுவதும் அந்த அச்சுறுத்தல்களிலிருந்து மனித சமூகத்தைப் பாது காப்பதற்கு சட்டங்கள் அவசியம் என்பதை உணர்த்துவதும் இலகுவாகிவிடும். இந்த வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலகுவில் அனைத்து நாடுகளும் அமுல்படுத்தும் ஒரு சூழலை உருவாக்கலாம். இப்போது அந்த உத்தி புதிய மதத்தின் காவலர்களால் வெற்றிகரமாக அமுல்படுத்த வருகின்றது. இந்த சட்டத்தின் மூலம் புதிய மதத்தின் காவலர்கள் இரண்டு கனிகளை ஒரே கல்லில் பறித்து விடுகிறார்கள்.
  1. தமக்கெதிரான சட்டங்கள் உலகில் அமுல்படுத்தப்படுவதைத் தடுத்தல்.
  2. தமது எதிரிகளுக்கு எதிராக இந்தப் பயங்கரவாத தடைச் சட்டங்களை உலகெங்கும் அமுல்செய்து அவர்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்குதல் அல்லது முடியுமான இடங்களில் அவர்களை அழித்து விடுதல்.

இவை தவிர பயங்கரவாதம் என்ற பெயரால் ஒரு நாட்டு மக்களுக்கெதிராக அந்நாட்டு மக்களையே தூண்டி சகோதரப் படுகொலை செய்யத் தூண்டுவதன் மூலம் நிரந்தரமான எந்தவொரு தீர்வுக்கும் அந்நாட்டு மக்களால் வரமுடியாத சூழலைத் தோற்றுவித்து புதிய மதத்தின் கடவுள்களை நம்பியிருக்கும் நிர்ப்பந்தத்தை திணித்தல் போன்ற நோக்கங்களும் சட்டத்தை சர்வதேசமயப்படுத்தும் இந்த முயற்சியால் ஈட்டப்படுகின்றன.

அதே போன்று மற்றுமொரு வகை சட்டங்கள் இந்தப் புதிய மதத்தின் அபிலாசைகளை உலகெங்கும் பரவச்செய்வதற்கு அவசியமாகின்றன. புதிய மதத்தின் காவலர்கள் அவற்றையும் சர்வதேசமயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவை மகளிர் மற்றும் சிறுவர் தொடர்பான சட்டங்கள்.

மனித உரிமைகள் என்ற அழகான மகுடத்தின் கீழ் இந்த சட்டங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல் செய்யப்படுகின்றன. உண்மையில் இந்த சட்டங்களால் மகளிருக்கும் சிறுவர்களுக்கும் சில நன்மைகள் கிடைக்கவே செய்கின்றன. எனினும், இந்த சட்டங்களின் உள்ளார்ந்த நோக்கங்களை ஆராய்ந்து பார்ப்பவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

இந்த சட்டங்கள் சமூகத்தின் மிகப்பலமான குடும்ப அத்திவாரத்தைத் தகர்க்கும் நோக்கம் கொண்டவை என்பதே அதுவாகும்.

சிறார்களுக்கும் மகளிருக்கும் எதிரான வன்முறைகள் சிலவற்றை இந்த சட்டங்கள் மூலம் உண்மையில் தடுக்க முடிந்தாலும் (தடுக்க முடிகிறது என்பதை விட நடந்து முடிந்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க முடிகிறது என்பதே சரியானது) இரு சாராருக்கும் இந்த சட்டங்கள் எல்லையற்ற சுதந்திரங்களை வழங்கி குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்கின்றன. ஏற்கனவே இத்தகைய சட்டங்களால் மேற்குலகின் குடும்ப அத்திபாரங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. குடும்ப மாண்புகள் அனைத்தும் இந்த சட்டங்களால் அங்கு புதைக்கப்பட்டுவிட்டன. அது மட்டுமல்ல உடல்மயமானதொரு ஆபாச வாழ்க்கை இந்த சட்டங்களால் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அது போன்றதொரு ஆபாச உலகைக் கட்டியெழுப்பி மக்களின் கவனத்தை தங்களது நோக்கங்களுக்கு இடையூறாக திரும்பிவிடாமல் வைத்துக் கொள்ள முடிகிறது புதிய கடவுளர்களால்!

இவ்வாறு இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் புதிய மதம் ஏனைய அனைத்து மதங்களையும் பின்தள்ளிவிட்டு தனது செல்வாக்கை ஸ்தாபிக்கும் உத்திகளைப் பரவலாக்கியுள்ளது. விழுமியமற்ற ஓர் உலகை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்லும் இந்தப் புதிய மதத்தின் யதார்த்தங்களை மதங்களை நேசிக்கும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பிரச்சினை பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்பதல்ல. மாறாக இந்த மதங்கள் மனித சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்த விழுமியங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு விழுமியங்களே இல்லாத... ஏகாதிபத்திய நாகரிகத்தின் கவர்ச்சிகள் மிகுந்த... புதியதோர் உலகத்தினுள் மனித சமூகம் எடுத்துச் செல்லப்படுவதே இன்றைய பிரச்சினைகளாகும்.

மதங்களை நேசிப்பவர்கள் இதனை உணரத் தவறினால் இரண்டு விளைவுகள் தோற்றம் பெறும். இரண்டும் புதிய மதத்தின் கடவுளர்களுக்கு இனிப்பாகவே இருக்கும்.

  1. ஒவ்வொரு மதத்தையும் பின்பற்றுகின்ற பொது மக்கள் தங்களது மதத்தை மியூஸியத்தில் (Museum) வைத்து விட்டு மிக வேகமாக இந்தப் புதிய மதத்தின் கவர்ச்சிமிக்க வழிபாடுகளுக்குள் வேகமாக சென்று கொண்டிருப்பார்கள்.
  2. தங்களது மத்தைக் கைவிட்டோம் என்ற குற்ற உணர்வு மிகைத்து விடாமல் இருப்பதற்கு புதிய மதத்தின் கடவுளர்கள் காட்டித்தந்த மதவாப் புனிதப் போரில் ஈடுபட்டு ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மதத்தை சேர்ந்தவர்களை வெட்டிக் குதறிக் கொன்றிருப்பார்கள்.

இவை உலகில் யாருடைய நலனை மேம்படுத்துவதற்கு உதவும்?!


உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 
2013 டிசம்பர் மாத அல் ஹஸனாத் சஞ்சிகையில் இருந்து

0 comments:

Post a Comment