Tuesday, March 11, 2014



அடிப்படைவாதம் என்பது கிறிஸ்தவ சமூக சூழலில் கருக்கொண்ட ஒரு பிரயோகமாகும். இப்போது அதனை முஸ்லிம்களோடு இணைத்துப் பேசுகின்றனர். இருப்பினும் பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், இனவாதம் போன்று வெறுக்கத்தக்க சொல்லல்ல அடிப்படைவாதம்.

அடிப்படைவாதம் என்பது அடிப்படைகளை மதித்து வாழும் தன்மையைக் குறிக்கின்றது. ஒருவர் எத்தகைய அடிப்படைகளை ஏற்று, அங்கீகரித்து, மதித்து நடக்கிறார் என்பதைப் பொருத்து அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைத் தீர்மானிக்கலாம் மதத்தின் அடிப்படைகள் மீது ஒருவர் தனது சிந்தனையை நெறிப்படுத்தியிருந்தால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி எனலாம் மாறாக வன்முறைகளைத் தூண்டும் பிழையான அடிப்படைகள் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் பிழையான ஒரு அடிப்படை வாதத்தில் இருக்கிறார் எனலாம்

ஒரு பௌத்தர் புத்த மதத்தின் அடிப்படைகளில் தனது சிந்தனையை நெறிப்படுத்தினால்...

ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்துவ அடிப்படைகள் மீது தனது சிந்தனைதயை நெறிப்படுத்தினால்...

ஒரு இந்து இந்து மதத்தின் அடிப்படைகள் மீது தனது சிந்தனைதயை நெறிப்படுத்தினால்...

ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைகளின் மீது தனது சிந்தனையை நெறிப்படுத்தினால்...

உலகம் அதனை அவரவரது அடிப்படை உரிமையாகக் கருதுகிறதே தவிர செய்யக்கூடாத ஒரு வேலை என்று அதனைப் பார்ப்பதில்லை. எனினும் மதத்தின் பெயரால் ஒருவர் பிழையான சிந்தனைகளை உருவாக்கி தவறான வழியில் மக்களை வழிநடத்த முற்பட்டால் அதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியிருக்கும்.

மதத்தின் பெயரால் ஒரு பிழையான சிந்தனையை ஒருவர் வளர்க்க முற்பட்டால் அவரைத்தான் தீவிரவாதி என்கி றோம். மதத்தின் அடிப்படைகளுக்கு ஏற்ப நேரிய சிந்தனையோடு செயற்படுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை, அவர்களை அடிப்படைவாதிகள் என்று கூறுவது பிழையுமில்லை.

உதாரணமாக புத்த மதத்தின் பெயரால் சமுகத்தைப் பிழையாக வழிநடத்தி வெறுப்பையும் குரோதத்தையும் பகையையும் வளர்க்க முயல்கின்றனர், சிலர் புத்த மதத்தின் வழிகாட்டல்களுக்கும் அடிப்படைகளுக்கும் ஏற்ப சமுகத்தை வழிநடத்த முயல்கின்றார்கள் சிலர் இந்த இரண்டாமவர்களை அடிப்படைவாதிகள் என்று கூறுவதில் என்ன பிழை இருக்கிறது. அதேபோன்று இஸ்லாத்தின் அடிப்படைகள் மீது உறுதியாக நின்று சமுகத்தை சரியான திசையில் வழிநடத்த முயல்பவர்களை முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கூறுவதும் இஸ்லாம் என்ற பெயரில் சமுகத்தைப் பிழையாக வழிநடத்த முயல்கின்றவர்களே முஸ்லிம் தீவிரவாதிகளாவர்.

இந்தவகையில் ஒவ்வொரு மத்தைச் சேர்ந்தவர்களும் அடிப்படைவாதிகளாக இருக்கவேண்டும். தீவிரவாதிகளாக இருக்கக்கூடாது என்பதே எமது கருத்தாகும் இந்த ரீதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் அடிப்படைவாதிகள் என்று யாராவது கூறினால் அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. முஸ்லிம்கள் தமது சமூகத்தினுள் சிறு சிறு வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதும் மதத்தின் பெயரால் ஏனைய சமூகங்களுக்கு எதிராக செயல்பட்ட வரலாறு இலங்கையில் இல்லை என்று கூறுமளவு மிக மிகக் குறைவாகும். காரணம் இஸ்லாத்தின் சீரிய அடிப்படைகள் சிலவற்றில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதே. முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அதிகரித்திருக்கின்ற தற்போதைய சூழலில் கூட அவர்கள் மேலும் இஸ்லாமிய அடிப்படைகள் மீது உறுதியாகவே இருக்கின்றனர்.

அத்தகைய இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றை இந்த இடத்தில் ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

  1. பிரபஞ்சத்தையும் மனிதன் உற்பட அதில் இருக்கின்ற அனைத்தையும் படைத்துப் பரிபாலிபப்வன் அல்லாஹ்வே.
  2. உலக வாழ்வுக்குப் பின் மற்றரொரு உலகின் மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அவர்களது உலகக் கணக்குகளைத் தீர்த்து மறுமையில் அல்லாஹ் இறுதித் தீர்ப்பை வழங்குவான். அந்தத் தீர்ப்புக்களுக்கேற்ப அந்நாளில் மனிதர்கள் ஒன்றில் சுவனம் செல்வார்கள். அல்லது நரகம் செல்வார்கள்.
  3. மனிதர்களை ஒரு தாய் தந்தையில் இருந்தே அல்லாஹ் உருவாக்கினான். எனவே மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாவர். படைத்தவனுக்கு அடிபணிந்து நடப்பதைத் தவிர வேறு ஒன்றால் ஒரு மனிதன் தனது அந்தஸ்த்தை அல்லாஹ்விடம் உயர்த்திக்கொள்ள முடியாது.
  4. மனிதன் தோன்றிய நாள் முதல் மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் அவனது தூதர்களை மனித சமூகத்துக்கு அனுப்பிவைத்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியானவரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.
  5. அதேபோன்று ஆரம்ப மனிதன் முதலே மனித சமுகத்துக்கு வேதங்களும், கட்டளைகளும் அல்லாஹ்வால் அருளப்பட்டன. அவற்றில் இறுதியானதே அல்குர்ஆன்.
  6. படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பராமரிப்பில் இருக்கின்ற அவனது குடும்பம் போன்றது. எனவே அனைவருடனும் அனைத்துடனும் அன்போடும்  கருணையோடும் நடத்தல் வேண்டும். அல்லாஹ்வின் அனுமதியை மீறி ஒரு மனிதன் மீதோ ஒரு உயிரினத்தின் மீதோ  ஒரு மனிதனின் மானம், உயிர், உடைமை மீதோ கை வைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அல்லாஹ் அத்ததைய மனிதனைத் தண்டிப்பான்.

இது போன்ற இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒவ்வொரு முஸ்லிமின் சிந்தனையிலும் ஓரளவேனும் பதிந்திருக்கின்றன என்றே நாம் கருதுகிறோம். இந்த அடிப்படைகள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் முழுமையாக இல்லாவிட்டாலும்  ஓரளவேனும் தாக்கம் செலுத்துவதை எவரும் மறுக்க முடியாது. அதுமட்டுமல்ல அந்த அடிப்படைகள் மீது முஸ்லிம்கள் ஒன்று பட்டும் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு முஸ்லிம் அல்லாதவரை அவர் முஸ்லிம் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக வெறுக்கவோ, விமர்சிக்கவோ, தாக்கவோ, கொலை செய்யவோ அல்லாஹ்வின் அனுமதி இல்லை. ஒரு முஸ்லிம் அத்ததைய ஒரு தவறைச் செய்தால் அது தவறென்பதில் முஸ்லிம் சமூகம் முழுவதும் ஒன்றுபட்டுவிடும்.

அதே நேரம் அல்லாஹ் அனுமதித்த ஒரு பிராணியை அறுத்து உண்பதை உலகம் முழுவதும் பிழை என்று கூறினாலும் முஸ்லிம்கள் அதனைப் பிழை என்று கருதமாட்டார்கள் (உலகம் அதனைப் பிழை என்று கூறவுமில்லை) இவ்வாறு ஒரு சமூகம் தனது வாழ்க்கையை நெறிப்படுத்தும் சீறிய அடிப்படைகள் மீது உறுதியாக இருப்பது உலகின் எந்த மரபுக்கும் முரணானதல்ல. மாறாக அடிப்படைகள் மீது உறுதியாக இருக்கும் சமூகம் ஒன்றை எல்லோரும் கண்ணியமாகவே பார்க்கின்றார்கள். காரணம் அவர்கள் ஒரு ஒழுங்கைப் பேணி கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றார்கள். ஒழுங்கு அவர்களிடத்தில் இருப்பதால் ஒழுங்கீனம் எது என்பதும் அவர்களுக்கு விளங்கும். அதனால் அவர்களை இலகுவாக நெறிப்படுத்தலாம்.

அடிப்படைகள் எதுவுமில்லாமல் நாளுக்கு ஒரு கொள்கையோடு எந்த நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் சட்டங்களுக்கும் வறையறைகளுக்கும் அப்பால் செயல்படுவோரை உலகில் யாரால்  நெறிப்படுத்த முடியும். இத்தகையவர்கள் தாம் அடிப்படைகள் மீது உறுதியாக இருப்பவர்களைப் பார்த்து அடிப்படைவாதிகள் என்று கொக்கரிக்கின்றனர்.  இது வேடிக்கையாக இல்லையா?

அறிவையும் சிந்தனையும் பயன்படுத்தி வாழ்கின்றவர்கள் மற்றுமொரு உண்மையின்பால் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை அளப்பதற்குத் தெரிவு செய்யும் அடிப்படைகளை கண்மூடித் தனமாக ஏற்கமாட்டார்கள். ஒரு மதத்தோடு பிறந்துவிட்ட ஒரே காரணத்தாலும் அவற்றை சரி காணமாட்டார்கள். மாறாக தனது அறிவையும், சிந்தனா சக்தியையும் பயன்படுத்தி அதன் உண்மைத் தன்மைகளை அலசி ஆராய்ந்து விளங்குவார்கள்.

இவர்கள் தாம் மனிதர்களுக்கு மத்தியில் இருக்கின்ற புனிதர்கள். இவர்களால் மனித சமூகம் எண்ணற்ற நன்மைகளை அடைந்துகொள்ளும். இவர்களது பெயர்கள் வரலாற்றில் நன்றியோடு நினைவு கூரப்படும். இவர்கள் அடிப்படைகவாதிகள் வரிசையில் முதல் தரத்தைச் சேர்ந்தவர்களாவர். இத்தைகைய அடிப்படைவாதிகளை ஒரு நாடு பெறுவதற்கு பாக்கியம் செய்திருக்கவேண்டும்.

எனினும் இன்று இத்தகையவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். அல்லது சக்தியற்றவர்களாக இருக்கின்றனர். பிழையான அடிப்படைகள் மீது தங்களது சிந்தனைகளை வளர்த்துக் கொண்டவர்கள் இன்று செல்வாக்கோடு முன்னிலையிலும் இருக்கின்றார்கள். பிழையான அடிப்படைகள் தான் இனவாதிகளையும் உருவாக்குகின்றன.

இது எனது இனம். இந்த இனத்துக்கு வெளியே இருக்கும் மற்றொரு இனம் என்னுடையதல்ல.  அந்த இனத்தைச் சேர்ந்தவர்களை மனிதர்களாகவே என்னால் பார்க்க முடிவதில்லை. எனவே அந்த இனத்தின் இருப்பை என்னால் அங்கீகரிக்க முடியாது. அது இருப்பதை விட இல்லாதிருப்பதே சிறந்தது. எனவே அதற்கெதிராக நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ முடியுமான அனைத்தையும் செய்வேன். இது விடயத்தில் நீதி, நேர்மை உண்மை உயர்ந்த விழுமியங்கள் எதனையும் பார்க்க முடியாது கீழ்த்தரமான வழிமுறைகளாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி அந்த இனத்துக்கு எதிராக செயற்படுவேன். என்ற ஒரு சிந்தனையை ஒருவர் தனது செயல்பாடுகளுக்கு அடிப்படையாகக் கொண்டால் அவர்தான் இனவாதி. இத்தகையவர்கள் இந்த இனவாத சிந்தனையை செயற்படுத்த முனையும் போது சட்டங்கள், ஒழுங்குகள், உலக மரபுகள் அனைத்தையும் மீறி வன்முறைகளிலும் அட்டகாசங்களிலும் ஈடுபட்டால் அவர்கள்தான் பயங்கரவாதிகள்

இந்த ரீதியில் முஸ்லிம்கள் இனவாதிகளாகவோ, பயங்கரவாதிகளாகவோ இந்த நாட்டில் செயல்பட்ட வரலாறு இல்லை. முஸ்லிம்கள் தங்களது மார்க்க அடிப்படைகளில் உறுதியாக இருந்தார்களே தவிர அவர்கள் ஒரு போதும் இனவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் இருந்ததில்லை. தேர்தல் என்று வரும்போது முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் ஒரு போக்கு காணப்படுவது உண்மையென்றாலும் அது தேசிய மற்றும் பல்லின சூழலைப் பாதிப்படையச் செய்யுமளவு ஒரு பாரிய பிரச்சினையாக என்றும் இருந்ததும் இல்லை, பேசப்பட்டதும் இல்லை எனினும் விஷமத் தனமான சில சக்திகள் முஸ்லிம்களை அந்த   இடத்துக்கு இட்டுச் செல்ல பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. முஸ்லிம்களில் மிகச் சிலரையாவது அந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தால் அந்த விஷம சக்திகள் பெரிதும் மகிழ்ச்சி அடையக் காத்திருக்கின்றன.

முஸ்லிம்களே! நாம் எமது வரலாற்றில் தீவிரவாதிகள், இனவாதிகள், பயங்கரவாதிகள் அனைவரையும் கண்டிருக்கிறோம். நாம் எமது அசையாத நம்பிக்கையின் மீது உறுதியாக இருந்து இத்ததையவர்களின் முயற்சிகளை வலுவிழக்கச் செய்வோம். தீவிரவாதம், இனவதாம், பயங்கரவாதம் என்பன இஸ்லாத்தின் வழிமுறையல்ல என்பதை எமது சொல்லாலும் செயலாலும் நிரூபித்துக்கொண்டே இருப்போம்.

எம்மைப் பாதுகாப்பதற்கு எமது உண்னதமான கொள்கைகளும் அதனை வகுத்துத் தந்த ஏக இறைவனும் போதுமானவன்.


~ அபூ R. அப்துல்லாஹ் ~

0 comments:

Post a Comment