Tuesday, March 11, 2014
கவலை வேண்டாம்...

கத்தாபின் மகன் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு உத்தம உதாரணம் உண்டு.

கவலை வேண்டாம்... நம் மனதை அறிந்து அளக்கும் அல்லாஹுவின் அன்பின் மீது சந்தேகம் வேண்டாம்.

உமர் (ரலி) அவர்களின் ஆரம்ப காலத்தையும், பின்பு இறைவனை உணர்ந்து, ஏகத்துவத்தை விளங்கி இஸ்லாத்தை ஏற்று கொண்ட பின், அவரிடம் ஏற்பட்ட அரும்பெரும் மாற்றங்களையும் பாருங்கள்...

ஆம், குதிரையில் வாள் ஏந்தி, தங்கைக்கும், மைத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டு அந்த முகம்மதுவை பழி வாங்கி வருவேன் என்று புறப்பட்டது முதல்...

தங்கள் மரணத்தருவாயிலும், இந்த பூமி முழுவதும் தங்கமும், வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுத்து விடுவேன் என்று சொன்ன உமர் (ரலி) வரை...

அவரின் உயர்ந்த வாழ்வை சற்றே படியுங்கள்...

ஒரு காலத்தில் கத்தாபின் மகன் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதுண்டு,

கத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் மதுவில் மயங்கியதுண்டு,

கத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்துண்டு,

கத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் சூதாட்டம் நடத்தியதுண்டு,

கத்தாபின் மகன் உமர் (ரலி) மக்காவிற்கு வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளிடம் வரம்பு மீறியதுண்டு,

கத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் வாளும், குதிரையுமாக ஒரு அகங்காரம் கொண்ட மனிதராக மக்கா நகரை வலம் வந்ததுண்டு,

இறுதியில் தான் ஆதரிக்கும் சிலை தெய்வங்களை, அனுஷ்டானங்களை ஆதரிக்காத ஒரு கூட்டத்தை முஹம்மது உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்து, அவரை பழி வாங்க வந்த உமர் (ரலி) "சூரத்துல் தாஹா" மூலம் உண்மையை உணர்கிறார்.

அந்த நிமிடம் முதல் துவங்கியது அந்த உன்னத வாழ்வு...

அல்லாஹுவும், முஹம்மது(ஸல்)ம் இவரை பொருந்திக்கொண்டனர்.

இவருக்கு சொர்க்கம் நிச்சயம், இவர் வெற்றியாளர் என்று நற்செய்தி வழங்கப்பட்டவர்,

இன்று உலகில் தினம் ஐந்து நேரம் கேட்கும் பாங்கின் பிறப்பில் பங்குள்ளவர்.

இன்று நாம் கடைப்பிடிக்கும் சில கொள்கைகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கு மூலகாரணமாக இருந்தவர்.

நமது உயிரினும் மேலான உத்தம தூதரின் உயிரை வலதும், இடதும், முன்னும், பின்னுமாக பாதுகாத்து வந்தவர்,

பகிரங்கமாக சவால் விட்டு ஹிஜ்ரத் செய்தவர்,2630 நபி மொழியின் சொந்தக்காரர்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களால் "உமர் அல் ஃபாரூக்" என்ற புனைப் பெயர் வழங்கப்பட்டவர்.

தனது செல்வங்களை அல்லாஹுவின் பாதையில் செலவு செய்தவர்.

பத்ரு போரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலது பக்கம் நின்று போர் செய்தவர்.

பத்ரு போரில் எதிராக வந்த சொந்தத்தை எதிர்த்தவர், சொந்தமாக இருந்த அடிமையை இழந்தவர்.

இவர் கருத்தை ஆதரித்து வேத வசனம் இறக்கப்பட்டவர்.

உஹதில் ஷஹீதான வஹப் (ரலி) அவர்களை நினைத்து அடக்கடி பொறாமைப்பட்டவர்.

இந்த உமரை (ரலி) நேசிப்பது ஈமானின் அடையாளம் என்றும், இந்த உமரை (ரலி) நிராகரிப்பது இறை மறுப்பின் அடையாளம் நம் இறைத்தூதரால் கௌரவிக்கப்பட்டவர்.

இறைத்தூதரின் இழப்பை தாங்கமுடியாமல் இறைத்தூதர் இறந்து விட்டார் என்று சொல்பவனின் தலை எடுப்பேன் என்று சொல்லி, பின்னர் தவறை உணர்த்து தன்னை திருத்திக்கொண்டவர்.

அபூபக்கரை (ரலி) அரியணையில் அமர்த்தி ஆதரவு தந்தவர்.

இப்படி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் ஓர் உற்றத் தோழனாக... இஸ்லாத்தின் தூணாகத் திகழ்ந்தவர்...

உலக வரலாற்றில் ஓர் உன்னத அரசாட்சியை தந்த தருணம் தான் இரண்டாம் கலிபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்ற தருணம்.

உமர் (ரலி) அவர்களை, இரண்டாம் கலிபாவாக பொறுப்பேற்க அபூபக்கர் (ரலி) அவர்கள் அழைத்த போது, நீதி நிலை நாட்டவேண்டுமே என்ற பயத்தால் தயங்கி நின்றவர்.

உமருடைய பரசிய வாழ்க்கையை விட, ரகசிய வாழ்க்கை சிறந்தது என்று உஸ்மான் (ரலி)யால் அங்கீகரிக்கப்பட்டு, இவர் தான் தகுதியானவர் என்று ஆதரவளிக்கப்பட்டவர்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர, வேறு நிழல் இல்லாத மறுமை நாளில், அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களில் நீதி நிலை நாட்டும் தலைவரும் உண்டு என்பதற்காக, இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா ஆனவர்.

கலிபா பொறுப்பை ஏற்ற உடன் அவர் சொன்ன வார்த்தைகள்...

"மரியாதைக்குரியவர்களின் வாக்கை நான் மதிக்கவில்லை என்ற பயம் எனக்கு இல்லாது இருந்திருந்தால்... நான் இந்த பொறுப்பை ஏற்று இருக்க மாட்டேன், எனக்கு தெரியும் நான் ஒரு கடுமையானவன் என்று...

அது நபிகள்(ஸல்), பின்பு அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் அப்படியே நடந்து கொண்டேன். ஆனால் அவர்கள என் விஷயத்தில் திருப்தியாளர்களாக இருந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

இன்று நான் சொல்லி கொள்கிறேன்.

இனி என் கடுமை அநீதிக்கு எதிரே மட்டுமே .

அநீதியாளர்களின் கன்னத்தின் என் கால் இருக்கும். நீதிக்கு முன்னே அதன் காலில் என் கன்னம் இருக்கும்.

நான் நீதி தவறினால், அரசு உடமைகளை பயன்படுத்துவதில் ஏதேனும் அத்து மீறல் நடந்தால், நீங்கள் என்னை திருத்த வேண்டும் என்று சொன்ன போது, ஒரு கிராமவாசி, வாளுடன் எழுந்து நின்று, "ஆம், நான் இந்த வாளை வைத்து திருத்துவேன்" என்று சொன்ன போது, அதை எற்றுகொண்டவர்.

அந்த காலத்தையும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.. ஆட்சியாளர்கள் இறைவனுக்கு சமம் அவர்கள் அக்கிரமங்களை மக்களே ஏற்று கொண்டு வாழ்ந்த அந்த கால கட்டத்தில் தான் உமரின் (ரலி) இந்த ஆட்சி என்பதை நாம் மறக்க வேண்டாம்.

ஒரு மதத்தலைவரும், ஆட்சியளுரமாக இருந்த அவர் நீதிக்கு முன்னால்அனைவரும் சமம் என்பதை சொல்லாலும், செயலாலும் உண்மைபடுத்தியவர்.

அரசு சொத்துக்களை பயன்படுத்துவதில் தானும் மிகவும் கவனமாக இருந்தவர், தன் குடும்பத்தாரையும் அதில் கவனமாக கண்காணித்தவர்.

இறைவன் சந்நிதியில் தன் சுமையை தானே சுமக்க வேண்டும் என்று சொல்லி உணவு தானியங்களை தானே முதுகில் சுமந்து சென்று, பசித்திருந்தவருக்கு கொடுத்தவர்.

பாலில் தண்ணீரை கலக்கக் கூட பயப்படும் ஓர் உத்தம சமுதாயத்தை உருவாக்கியவர்.

தன் ஆட்சியில், பசியால் ஒரு ஒட்டகம் இறப்பதை கூட கண்டு பயந்தவர்.

பஞ்ச காலத்தில் மக்களுடன் சேர்ந்து தானும் தன் உணவின் தரத்தையும், அளவையும் குறைத்து கொண்டவர்

அடம்பர அரண்மனை இல்லாமல் மரத்தின் நிழலில் கூட தூங்கியவர்.

நாட்டில் சீர் கேடுகளை, அனாச்சாரங்களை களைய கடுமையான சட்டம் ஏற்றியவர்.

முஸ்லிம் அல்லாதவர்களின் மானத்துக்கும், உடமைக்கும், ஆராதனை, ஆலயங்களுக்கும் மதிப்பும், பாதுகாப்பும் வழங்கியவர்.

கவர்னர்களை நியமிப்பதில் கடுமையான நிபந்தனைகளை வைத்தவர்.

அறியாமை காலத்து உமர் (ரலி) அவர் தான் தன்னை உணர்ந்து மாறிய அந்த நிமிடம் முதல் அல்லாஹு அவருக்கு தன்னுடைய ஒளியை அதிகப்படுத்தி கொடுத்தான், அவரது இறையச்சத்தை சீராக்கி வைத்தான்.

ஒரு தோழராக, ஒரு ஆட்சியாளராக இவரை அல்லாஹு இந்த இஸ்லாத்துக்கு தேர்ந்தெடுத்து நேர் வழி காட்டினான்.

இஸ்லாத்தின் மதிப்புமிக்க மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்துக்களையும் இவருக்கு தந்து கருணை புரிந்தான்.

அப்படிப்பட்ட வல்ல நாயகன் அவன் நம்மையும் மன்னிப்பான், நமக்கும் கருணை காட்டுவான், நம்மையும் நேராக்கி சீராக்குவான்.

யா அல்லாஹ்... நாங்கள் அறிந்தும், அறியாமலும், சிறுதும், பெரிதுமாக செய்த எல்லா வித பாவங்களையும் மன்னிப்பாயாக..

பாவமான, பயனற்ற காரியங்களில் இருந்து விலகி இருக்கவும், எங்களது கடமைகளை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யவும் எங்களுக்கு உதவி செய்வாக...

நன்றி:- Ajahibu Abdulrazaq

0 comments:

Post a Comment