Tuesday, March 11, 2014



வரலாறு நெடுகிலும்… அனைத்து சமூகங்களாலும்… பெரும் சர்ச்சைகளுக்குட்படுத்தப்பட்ட விவாதப் பொருள்தான் “பெண்.” இன்னும், இன்றும் அவள் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் ஓயவில்லை.

“பெண்” விடயத்தில் ஒரு சாரார் எதையெதையெல்லாம் வளர்ச்சி, முன்னேற்றம், அறிவுடைமை, கண்ணியம், உயர்வு என்று கருதுகின்றார்களோ அவற்றை நேர் எதிராக மற்றுமொரு சாரார் வீழ்ச்சி, பின்னடைவு, அறியாமை, அவமானம், இழிவு என்று கருதுகின்றார்கள்.

இந்தப் பாரிய முரண்பாடு இரண்டு பின்னணிகளில் தோற்றம் பெறுகின்றது. அவற்றுள் ஒன்று, வாழ்க்கை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒரு சமூகத்திற்கும் பிறிதொரு சமூகத்திற்குமிடையில் நிலவுகின்ற முரண்பாடாகும்.

வாழ்க்கை அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அவனே ஆணையும் பெண்ணையும் படைத்தான். அவ்விருவரின் துணையுடன் மலரும் வாழ்க்கைக்கு வரையறைகளையும் வழிகாட்டல்களையும் அவனே ஏற்படுத்தினான் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களுக்கும்…

வாழ்க்கை இயற்கையானது… தற்செயலானது… விலங்கிலிருந்து பரிணாமம் பெற்றது. விலங்குகள் எவ்வாறு தமது தேவைகளை நிறைவு செய்து விட்டுச் செல்கின்றனவோ, அதேபோன்று மனிதனும் தனது விருப்பம்போல் கட்டுப்பாடுகளின்றி வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்ற கோட்பாட்டை சரிகண்டவர்களுக்குமிடையில் “பெண்” பற்றிய பார்வை எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது “பெண்” விடயத்தில் தோற்றம் பெற்ற பாரிய முரண்பாட்டுக்கான ஓர் அடிப்படைக் காரணியாகும்.

மற்றுமொரு பின்னணியிலும் “பெண்” விடயத்தில் சர்ச்சைகளும் முரண்பாடுகளும் தோற்றம் பெறுகின்றன. இந்த சர்ச்சைகள் வாழ்க்கை பற்றிய கோட்பாடுகளில் பாரிய முரண்பாடுகளைக் கொண்டவர்கள் மத்தியில் வந்தவை அல்ல. மாறாக, வாழ்க்கை பற்றி (கோட்பாடுகளில் ஒன்றுபட்டவர்களிடையே) ஏற்பட்டுள்ள சர்ச்சைகளே இவை. இவர்களுக்கு மத்தியில் “பெண்” பற்றிய சர்ச்சைகள் அல்லது முரண்பாடுகள் தோன்றுவதற்குக் காரணம், “பெண்” விடயத்தில் வந்துள்ள குர்ஆன், சுன்னாவின் போதனைகளும் நபிகளாரின் நடைமுறைகளும் இவர்களால் வித்தியாசமாக விளங்கப்பட்டதாகும்.

“பெண்” விடயத்தில் வந்துள்ள குர்ஆன்-சுன்னாவின் போதனைகள், நபிகளாரின் நடைமுறைகள் என்பவற்றை விளங்குவதற்கு இவர்கள் இரண்டு வகையான போக்குகளைக் கையாண்டார்கள்.

  1. இஸ்லாம் இயற்கையின் மார்க்கமாகும். அது இலகுவானது அருள்மிக்கது அனைவரும் ஏற்றுப் பின்பற்றத்தக்கது. அனைத்து சமூகங்களுக்கும் அனைத்துக் காலங்களுக்கும் ஏற்புடையது. சமூகங்களை தன்பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டது… என்பன போன்ற இஸ்லாத்தின் சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் பெண் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடுகளை விளக்கும் போக்கு.                                                                                                
  2. இஸ்லாம் கண்டிப்பானது… நெகிழ்வுத்தன்மையற்றது… கால மாற்றங்களுக்கு இடம்தராதது… என்பன போன்ற தன்மைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பெண் பற்றிய நிலைப்பாடுகளை விளக்கும் போக்கு.

“பெண்” சம்பந்தப்பட்ட விடயத்தில் முஸ்லிம் சமூகம் இந்த இரண்டு போக்குகளையும் கொண்ட சமூகமாகவே இன்றும் திகழ்கின்றது.

“பெண்” தொடர்பிலான பார்வையை முதல் வகை அணுகுமுறைக்கு நெருக்கமானதாக முன்வைப்பதே இந்த சிறு ஏட்டின் நோக்கமாகும். இஸ்லாத்தின் சிறப்பியல்புகளுக்குப் பொருத்தமானதாகவும் நெருக்கமானதாகவும் இவ்வாக்கம் அமைவதற்கு அல்லாஹ்வின் அருள் வேண்டுகின்றேன்.

இச்சிறு ஏடு “பெண்” தொடர்பிலான இஸ்லாத்தின் பார்வையை இரண்டு பிரதான தலைப்புகளில் விளக்குகின்றது.

  1. ஆண் பெண் இரு பாலாருக்குமிடையில் முழுமையான சம அந்தஸ்தை இஸ்லாம் என்னென்ன விடயங்களில் வழங்கியிருக்கிறது.                                                                                
  2. எவ்வாறான விடயங்களில் அந்தஸ்துக்களை வேறுபடுத்தியிருக்கிறது ஏன்?

இந்த அந்தஸ்து வேறுபாடுகளில் இஸ்லாத்தின் இயல்புக்குப் பொருந்தாத வகையில் புறம்பாக விளக்கப்பட்ட பிழையான கண்ணோக்குகள் தெளிவுபடுத்தப்பட்டு அவற்றுக்கான சரியான விளக்கங்களை முன்வைக்கும் முயற்சி இவ்வாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது, உண்மையில் பெண்கள் பற்றிய இஸ்லாமிய சட்டங்களை விளக்கும் ஒரு நூல் அல்ல. மாறாக, பெண்ணின் அந்தஸ்து பற்றியே இந்நூல் பேசுகின்றது. வரலாற்றில் முதல் தடவையாக பெண் உரிமை பற்றியும் பெண் சுதந்திரம் பற்றியும் நாம்தாம் பேசுகின்றோம் என்று நினைக்கும் நவீன அறிவியல் யுகத்துக்கு ஒரு செய்தி சொல்ல வேண்டும். இன்றைய நவீன உலகம் பெண்களுக்கு வழங்கியதைவிட உண்மையான சுதந்திரத்தையும் அந்தஸ்தையும் 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் அவர்களுக்குக் கொடுத்துவிட்டது.

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய அந்தஸ்தைவிட அதிகமான ஒன்றை உலகில் இன்றுவரை யாரும் கொடுக்கவில்லை. இந்த உண்மையை இன்றைய உலகம் புரிந்து கொள்ளாதது போலவே முஸ்லிம்களுள் சிலரும் புரிந்து கொள்ளாதிருக்கின்றனர். அத்தகையோருக்கும் இந்நூல் இஸ்லாத்தின் மகிமையைப் புரிய வைக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆகும்.

இந்நூலில் பெண்கள் பற்றிய அனைத்து விவகாரங்களும் விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இஸ்லாத்தின் எதிரிகளாலும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் அலசப்படும் முக்கியமான சர்ச்சைகள் சிலவற்றுக்கு மட்டுமே இந்நூல் விளக்கத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய விளக்கங்களால் பயன்பெறும் வாசகர்கள் தமது பிரார்த்தனைகளில் என்னையும் இணைத்துக் கொள்வதோடு, மற்றொருவரையும் கண்டிப்பாக நினைவுகூருமாறு வேண்டுகின்றேன். அவர்தான் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் ஷரீஆ துறைப் பேராசிரியரான கலாநிதி முஹம்மத் புல்தாஜி அவர்கள்.

“அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பார்வையில் பெண்ணின் மகிமை” என்ற அவரது நூலின் கருத்துக்களையும் தன் போக்கையும் தழுவியே இந்நூலை நான் தொகுத்து வழங்கியுள்ளேன். அந்த நூலுக்கு வெளியிலிருந்தும் பல விடயங்கள் எனது தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இந்நாட்டுச் சமூகத்துக்கும் பொருந்தும் வகையில் விடயங்களைத் தொகுப்பதிலும் முன்வைப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளேன். இருப்பினும், இந்நூலைத் தொகுப்பதற்கும் தயார்செய்வதற்கும் பெரிதும் உதவியது கலாநிதி முஹம்மத் புல்தாஜி அவர்களது ஆக்கமே.
அரபு மொழியில் 450 பக்கங்களைக் கொண்ட அன்னாரது ஒரு பெரும் ஆய்வு நூலிலிருந்து இச்சிறு ஏட்டைத் தொகுத்திருக்கின்றேன். அதன் மூலம் எனக்கும் எமது வாசகர்களுக்கும் நிறைவான பலனை அல்லாஹ் தந்தருள வேண்டும் என்பதே எனது அவா.

இவ்வாக்கம் இன்று வரை நிலவிய… இனியும் நிலவப் போகின்ற பெண் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது. பெண் பற்றிய சர்ச்சைகள் பெண்ணை மட்டும் அடிப்படையாக வைத்து வந்தவையல்ல.

பெண்ணின் அந்தஸ்தை உயர்த்திய மார்க்கத்தையும்… அதன் நடுநிலைத்தன்மையையும் எல்லாக் காலங்களுக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் தன் இயல்பையும்… மற்றுமுள்ள இஸ்லாத்தின் சிறப்பம்சங்களையும் விளங்கிக் கொள்வதிலும் செயற்படுத்துவதிலும் எமது சமூகத்தில் காலா காலமாக நிலவிய வேறுபாடுகள் பெண் பற்றிய கண்ணோட்டத்திலும் பாரிய வேறுபாட்டை உருவாக்கியுள்ளன.

இத்தகைய வேறுபாடுகள் காரணமாக இவ்வாக்கத்தை சரிகாண மறுப்பவர்கள் எமது சமூகத்தில் இருக்கவே செய்வர்.

எனினும், இஸ்லாத்தை நடுநிலையாக நின்று நோக்குபவர்களுக்கு இவ்வாக்கம் ஒரு தெளிவையும் விளக்கத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றேன். வல்ல அல்லாஹ் அவனது மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக் கொள்ளும் பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருளப் பிரார்த்திக்கின்றேன்.

எமது இத்தகைய சிறு முயற்சிகளைப் பயனுள்ளதாக ஆக்கிவைக்க அவனே போது மானவன். புகழனைத்தும் அவனுக்குரியதே!


ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
துல்கஃதா, 1434 (செப்டெம்பர் 2013)

0 comments:

Post a Comment