Tuesday, March 11, 2014



அழகிய வார்த்தைகளை பேசுங்கள் அன்றேல் அமைதி காத்துக் கொள்ளுங்கள், நாவையும் மறைவான உறுப்புக்களையும் காப்பதாக உத்தரவாதமளிக்கும் ஒருவருக்கு தான் சுவர்க்கத்தை உத்தரவாதமளிபேன், தனது நாவாலும் நடத்தையாலும் அடுத்தவர் அபயம் பெறாதவரை ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது இவ்வாறான பல நபி மொழிகளை நாம் அறிவோம்.

கனிவான உபதேசங்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள், அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்த்தல், மதிப்பளித்தல், கலந்துரையாடல்,தெளிவாக கூறுவதைக் கூறல், உண்மையே பேசல் போன்ற அழகிய வழி காட்டல்களை இஸலாம் வழங்கியுள்ளது.

புறம் பேசல்,வீண்பழி சுமத்தல், வதந்தியை பரப்புதல்,இட்டுக்கட்டல்,அபாண்டம் சுமத்தல் போன்றவற்றை தீமைகளாக பெரும்பாவங்களாக இஸ்லாம் கருதுகிறது.

குறிப்பாக கண்டிப்பாக சேர்ந்தே வாழவேண்டுகின்ற கணவன் மனைவி குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மத்தியில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதில் அவதானம் தேவைப் படுகிறத, ஒருமுறை சொல்லிவிட்ட வார்த்தைகளை மீண்டும் பெற்றுக் கொள்வது முடியாத காரியமாகும்.

எமது வார்த்தைகள் எவ்வாறு எங்களுக்கு சதகாவாக நன்மைகளாக ஆக முடியுமோ அதேபோன்றே பெரும் சாபக் கேடாகவும் மாறிவிட முடியும், எமது நன்மைகளை நட்கருமங்களின் பலாபலன்களை அழைத்து விடவும் மறுமையில் பெரும் நஷ்டவாளிகளாக எம்மை மாற்றி விடவும் முடியும்.

"கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்." (ஸுரத்துல் பகறா 2: 263)

நாங்கள் ஒன்றை பேசுவதாயினும், அடுத்தவருக்கு பதில் கூறுவதாயினும் கலந்துரையாடல்கள் கருத்துப் பரிமாறல்கள் செய்வதாயினும் இடம் பொருள் ஏவல் அறிந்து நிதானமாக, சமயோசிதமாக தெளிவாக அழகிய பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு சுருக்கமாக பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் போன்று சமூக வாழ்விலும் தர்க்கத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை அழகிய கருத்துப் பரிமாறல்களுக்கு இடமிருக்கின்றது. வாதப் பிரதி வாதங்கள் இஸ்லாமிய அற நெறிகளை மீறுகின்ற பொழுது விட்டுக் கொடுத்து ஸலாம் கூறி விடை பெறுதல் இஸ்லாமிய ஒழுங்காகும்.

அடுத்தவர்களில் குறைகாண்பதையே தமது வாழ்வியல் ஒழுங்காக பிழைப்புக்கு மார்க்கமாக கொண்டுள்ள அரை வேக்காடுகளுடன் தர்க்கத்திற்குள் நுழையாது அவர்கள் சவால் விட்டால் "ஸலாம்" என்று கூறி கண்ணியமாக விலகிச் செல்லுமாறு இஸ்லாம் கூறுகிறது.

Ash Sheikh Inamullah Masihudeen (Naleemi)

0 comments:

Post a Comment