Tuesday, February 21, 2017


நமக்கு வழங்கப்பட்டிருக்கும் முகநூல் (Facebook) சுவரும் ஒரு அமானிதமே!

அதை வீண்விரயம் செய்ததற்காகவும், அதில் வீம்புகள் பேசியதற்காகவும் மறுமையில் இறைவனால் விசாரிக்கப்படுவோம்.

ஒவ்வொரு அசைவிற்கும் விசாரணை உண்டல்லவா?
இங்கே சிலர் பிறரது மானத்தை கீறிக்கிழிப்பதையும், அடுத்தவரின் பாவங்களை தோண்டித்துருவி ஆராய்ந்து ஏதோ தங்களது வெற்றுக்கண்களால் அவற்றைக்கண்டது போல் எழுதுவதையும் அவதானிக்கலாம்.

இஸ்லாத்தில் சக மனிதனின் மானம் புனித கஃபாவோடு ஒப்பிட்டு பேசப்பட்டிருக்கிறது. (கஃபா - Saudi Arabia நாட்டில் மக்கா நகரிலுள்ள முஸ்லிம்களின் புனித ஸ்தலம்)

இஸ்லாத்தில் குற்றமும் அதற்கான தண்டனைகளும் மிகவும் பக்குவமாக கையாளப்பட்டிருக்கின்றன.

விபச்சாரம் செய்துவிட்டதாக தாமே வந்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்த மாயிஸ் (றழி) அவர்களை நபிகள் நாயம் (ஸல்) அவர்கள்

  • முதல் தடவை விரட்டிவிட்டார்கள்.
  • இரண்டாவது முறையும் வந்து சொல்லி தனக்கான தண்டனையினை கேட்டார்! அவர் பைத்தியத்தில் உளருகிறாரா என்று ஸஹாபாக்களை பரிசோதிக்க சொன்னார்கள்.
  • மூன்றாவது முறை அவர் வந்தபோது குடித்து விட்டு பேசுகிறாரா என்று பார்க்கச்சொன்னார்கள்.
  • நான்காவது முறைதான் அவருக்கான தண்டனை நிறைவேறியது.

அப்போது ஒரு ஸஹாபி (நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் தோழர்) வந்து சொன்னார் "அந்த விபச்சாரி மாயிஸ் நாங்கள் கல்லால் எறியும் போது ஓடினார், ஆனாலும் நாங்கள் விடவில்லை. துரத்திப்பிடித்து வந்து மீண்டும் எறிந்து கொன்றோம்" என்றார்!

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலையோடு சொன்னார்கள்...

"நீங்கள் அவரை தப்பித்து போக விட்டிருக்கலாமே"
அத்தோடு மாயிஸ் (றழி) அவர்களை விபச்சாரி என்று அழைத்ததை கண்டித்த நபி அவர்கள் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு பயணமாகிறார் என்றும் நன்மாராயம் சொன்ன வரலாறு நம் முன்னே இருக்கிறது!

மனிதனது நன்மைகளும் தீமைகளும் மலக்குகளால் எழுதப்படுகின்றன.

பாவமன்னிப்பு எனும் அருட்கொடையால் இறைவன் பல பாவங்களை மன்னித்தும் விடுகிறான்!

நாளை மறுமையில் சிலரை இறைவன் தனிமையில் அழைத்து விசாரிப்பானாம்.

அதில் உலகில் உனது பாவங்களை மறைத்தது போல இன்றும் இந்த மக்கள் மன்றத்தில் அவற்றை மறைத்து விட்டேன் என்று கூறி இறைவன் (றப்புல் ஆலமீன்) தனது நிகரற்ற கருணையால் மன்னிப்பும் வழங்குவானாம்!

பாவங்களை கையாளுகிற முறையில் இறை வழியே இப்படி இருக்கிற போது...

இன்று பொது வெளியில் பலர் சாக்கடைகளை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்!

இதில் அசூசைப்படப்போவது அவர்களது கரங்கள்தான்!

பாவங்களில் அரசனின் பாவம் ஆண்டியின் பாவம் என்றெல்லாம் வேறுபாடுகள் கிடையாது.
அது இறைவனது தராசுக்கு (மீஸானுக்கு) சொந்தமானது.
அவற்றை நிறுப்பதற்கும்...

றகீப் அதீத்தின் (நாம் செய்யும் நன்மை தீமைகளை எழுத்துவதற்குப் பொறுப்பான வானவர்கள்) எழுதுகோல்களை பிடுங்கி எழுதுவதற்கும் நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது!

பிறரின் பிணம் திண்ணுகிற, தூர்ந்து போன பாவங்களை முகர்ந்து திரிகிற, சாக்கடைச்சகதிக்குள் இறங்கி அசுத்தங்களை பொது வெளியில் வாரி இறைக்கிற இஸ்லாத்தின் பெயரில் வாழும் அத்தனை பேருக்கும் இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம்!

இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.
இந்த துர்செயல்களை தொடர்ந்தால் உங்களது பாவங்கள் ஒரு நாள் சந்திக்கு வரும் !
 
--
நன்றி
Mujeeb Ibrahim

0 comments:

Post a Comment